முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் இறுதிப்பகுதியில் ஏற்றபட்ட மழை வெள்ளப்பெருக்கு காரணமாக உடைவடைந்த நாயாற்று பாலம் திருத்தும் பணிகள் நடைபெற்று வேலை முடிவுறும் நிலையில் காணப்படுகின்றது.
கடந்த நவம்பர் 28 ஆம் திகதி தொடக்கம் இந்த வீதி ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்ட நிலையில் கொக்குளாய்,கொக்குத்தொடுவாய்,கருநாட்டுக்கேணி,வெலிஓயா போன்ற பகுதிகளுக்கான பேருந்து மற்றும் வாகன போக்குவரத்துக்கள் தடைப்பட்ட நிலையில் கடற்படையினர் படகுகள் மூலம் மக்களை ஏற்றி இறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த நாயாற்று பகுதியில் உள்ள இரண்டு பாலங்கள் உடைப்பெடுத்த நிலையில் இதனை சீர் செய்யும் நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரும் இணைந்து சீர்செய்து வருகின்றார்கள்.
கடந்த மாதம் இரண்டு பாலங்களில் ஒரு பாலம் சீர்செய்யப்பட்ட நிலையில் மற்றைய பாலம் சீர்செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.
இந்த வீதி ஊடான போக்குவரத்திற்கான உத்தியோக பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை இந்த நிலையில் மக்கள் பாலத்தின் ஊடாக நடந்து சென்று வருவதை காணக்கூடியதாக உள்ளது.
