முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக தேர்தெடுக்கப்டப்டுள்ள பிரதேச சபை உறுப்பினர்களுக்கு பிரதேசங்களின் அனர்த்த அபாய முகாமைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிதிட்டத்தினை முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு மேற்கொண்டு வருகின்றது.
இதன்படி 24.09.2025 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றுள்ளது இதில் சட்ட விதிகள், முக்கிய செயல்பாடுகள், மாவட்ட ஒருங்கிணைப்பு பிரிவு, பிரதேச சபை, வட்டார உறுப்பினர்களின் பொறுப்புகள் மற்றும் துறைகளிடையேயான கூட்டு ஒருங்கிணைப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
கடந்த வாரம் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கும் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் திரு.கோகுலராஜா தலைமையிலான குழுவினர்கள் இந்த வழிப்புணர்வு நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றார்கள்.
எதிர்வரும் நவம்பர் 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ள சுனாமி பயிற்சி குறித்து கலந்துரையாடப்பட்டு, சுனாமி தயார்நிலை மற்றும் சமூகங்களின் விழிப்புணர்வு நிலையின் முக்கியத்துவம்
வலியுறுத்தப்பட்டது. கடலோர சமூகங்களுக்கு காலநிலை மாற்றத்தின் தாக்கம் பற்றியும் விளக்கம் கொடுக்கம் நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைப்பிரிவினர் ஈடுபட்டுள்ளார்கள்.
நிகழ்ச்சியின் போது, மீனவர்கள் 828 குறுஞ்செய்தி சேவையில் பதிவு செய்யப்பட்டு, பிற முன்னறிவிப்பு அமைப்புகள் குறித்தும் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர கிராமங்களான மணற்குடியிருப்பு ,வண்ணாங்குளம்,முள்ளிவாய்க்கால கிழக்கு,கள்ளப்பாடு,கோயில்குடியிருப்பு, உள்ளிட்ட கடல் சார் மீனவ அமைப்புக்களுக்கு இந்த விழிப்புணர்வு கருத்தரங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் 2025 நவம்பர் 5 ஆம் தேதி இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச IOWAVE-25 சுனாமி பயிற்சி குறித்த தகவல்களும் பகிரப்பட்டு வருவதுடன் முல்லைத்தீவு மாவட்டம் நேரடியாக வெளியேற்ற உருவகப்படுத்துதலில் ஈடுபடவில்லை என்றாலும் சுனாமி எச்சரிக்கை அமைப்பு அன்று சோதிக்கப்படும்.
அன்றைய எச்சரிக்கைகள் பயிற்சியின் ஒரு பகுதியாகும் என்பதால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் கரையோர மக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகின்றது.



