முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சட்டவைத்திய நிபுணர் இல்லாத காரணத்தினால் மாவட்டத்தில் இடம்பெறும் கொலைச்சம்பவங்களில் சந்தேகத்திற்கிடமான கொலைகளின் உடல்கூற்று பரிசோதனைக்காக உடலங்கள் யாழ்போதனா மருத்துவமனைக்கும்,வவுனியா பொது மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஜந்து ஆண்டுகளாக சட்டவைத்திய அதிகாரியாக சட்டவைத்திய நிபுணர்; க.வாசுதேவா அவர்கள் கடமையாற்றி இருந்தார் கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பிலான சட்டவைத்திய அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பித்து பல்வேறு சட்டவைத்திய சேவைகளை மாவட்டத்திற்கு வழங்கி இருந்த இவர் கடந்த இரண்டு மாதங்களுக்க முன்னர் மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளார்.இந்த நிலையில் இவரின் வெற்றிடம் இதுவரை நிரப்ப்படவில்லை

மாவட்டத்தில் இடம்பெறும் கொலைக்குற்றங்கள் தொடர்பில் பொலீசார் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய சட்டவைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனை செய்யவேண்டிய உடலங்கள் யாழ்ப்பாணத்திற்கும்,வவுனியா மருத்துவமனைக்கும் கொண்டு சென்றே சட்டவைத்திய நிபுணரின் அறிக்கையினை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்கு பொலீசாரும் பாதிக்கப்பட்ட மக்களும் தள்ளப்பட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் மாதாந்தம் சுமார் 40 தொடக்கம் 50 வரையான உயிரிழப்புக்கள் பதிவாகின்றன சாதாரண உயிரிழப்புக்களை பிரேத பரிசேதனை செய்யப்பட்டு உடலம் வழங்கப்பட்டாலும் சந்தேகத்திற்குரிய கொலைகளை பரிசோதனை செய்வதற்கு சட்டவைத்திய நிபுணர் இல்லாத நிலை காணப்படுகின்றமை கவலையளிக்கின்றது.
இந்த வெற்றிட்டத்தினை நிரப்பி மக்களுக்கு சரியான மருத்துவ சேவையினை வழங்க சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகளும்,மாவட்டத்தில் அக்கறை கொண்ட புத்திஜீவிகளும்,சமூக செயற்பாட்டாளர்களும் இதில் அக்கறை கொண்டு செயற்படவேண்டும் என்பது எமது கோரிக்கை
