முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்த மழைவெள்ளத்தினால் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளநிலையில் பலசிறுகுளங்கள் நீர் நிரம்பிக்காணப்படுகின்றன.
நீர்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்களில் வவுனிக்குளம் வான்பாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் முத்தையன் கட்டு குளத்தின் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் கடந்த 25.11.2024 அன்று குளத்தின் நான்கு வான்கதவுகளும் 6 அடிவரை திறந்துவிடப்பட்டுள்ளன.
இவ்வாறு திறந்துவிடப்பட்ட நீரானது பேராறு ஊடாக நந்திக்கடலை சென்றடைந்து வட்டுவாகல் பாலம் ஊடாக முல்லைத்தீவு பெருங்கடலை சென்றடைகின்றது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் பெய்த மழை காரணமாக குளத்திற்கான நீர்வரத்து அதிகாரித்து காணப்பட்டதால் 27,28ஆம் திகதிகளில் வட்டுவாகல் பாலம் மழைவெள்ளத்தினால் பாலத்தினை மூடிவெள்ளம் பாய்ந்த காரணத்தினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 28.11.2024 இன்று மாலை 6.30 மணிக்கு முத்தையன் கட்டு குளத்தின் நான்கு வான்கதவுகளும் பூட்டப்பட்டுள்ளன இதனால் நாளைமுதல் நந்திக்கடலுக்கான நீர்வரத்து குறைவடையத்தொடங்கும் நிலைகாணப்படும் போது வட்டுவாகல் பாலத்தின் மேலான மழைநீர் பெருக்கு குறைவடைய வாய்ப்புள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் விவசாயசெய்கை மழைவெள்ளத்தினால் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.