நாட்டின் பொருளாதாரத்தை மீட்க முடியாதென சஜித் பிரேமதாச கூறியபோது நாங்கள் அந்த சவாலை ஏற்றுக்கொண்டோம்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் போராட்டத்தினால் நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் போது, நாம் சஜித் பிரேமதாசவிடம் நாட்டை பொறுப்பேற்குமாறு கூறினோம். நாட்டின் பொருளாதாரத்தையும் இதற்குப் பிறகு வரும் தேர்தல்கள் மூலம் பாராளுமன்றத்திற்கும் ஜனாதிபதி நாற்காலியிலும் அமர முடியாதென கூறி அந்த பொறுப்பில் இருந்து சஜித் பிரேமதாச நழுவிச் சென்றுவிட்டார்.
பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அச்சமின்றி, தூரநோக்குடன் சவால்களைப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணிலின் அரசுடன் நாம் மக்களின் உயிரைக் காப்பாற்ற இணைந்து கொண்டோம்.
நாடு வீழ்ந்த இடத்தில் இருந்து இரண்டு வருடங்களில் எங்களால் நாட்டை கட்டியெழுப்ப முடிந்துள்ளது. ஹரின் சுற்றுலாத்துறை மூலம் நாட்டுக்கு டொலர்களை கொண்டுவந்தார். என்னால் வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலார்கள் மூலம் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்டு வர முடிந்தது.
இதனால் தான் மக்களுக்கு எரிபொருள், எரிவாயு, மருந்து மற்றும் மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்க முடிந்தது. இதன் காரணமாகவே நாட்டின் தொழில்துறைகளை கட்டியெழுப்பி பொருளாதாரத்தை வலுப்படுத்த முடிந்தது.
அன்று நாம் ஏற்றுக்கொண்ட பொறுப்பை இன்று சரிவர நிறைவேற்றிவிட்டு அச்சமின்றி வெளியே செல்கிறோம். எமது இரண்டு வருட கடின சேவை நமது வரலாற்றில் எழுதப்படும். எனக்கு வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வாக்காளர்களுக்கு நான்றிகளைத் தெரிவித்து கொள்வதாக முன்னாள் அமைச்சர் மேலும் கூறினார்.