மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களில்ன அலட்சியத்தால் விவசாயிகள் அலைக்கழிப்பு
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் காட்டு யானைகளால் நெல் வயல்களில் புகுந்து வருடந்தோறும் ஏற்படும் பயிர் அழிவுகள் என்பது புதியதோ, தற்செயலானதோ அல்ல. இது பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஒரு தீவிரமான பிரச்சினை என்பதும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் ஒன்றுமாகும்.
இந்நிலையில், விவசாயிகளின் பயிர்களை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் யானை விரட்டும் வெடிகள் வழங்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், நடைமுறையில் அந்த உதவிகள் பிரதேச செயலக மட்டத்தில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன என்பதே கசப்பான உண்மை.
அதன் அடிப்படையில், 12.01.2026 (திங்கள்) காலை 9.15 மணியளவில், கிராம சேவகர் மற்றும் கமக்கார குழு தலைவர் ஆகியோரின் உறுதிப்படுத்தலுடன் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், யானை விரட்டும் வெடிகளை பெறுவதற்காக விவசாயி ஒருவர் பிரதேச செயலகத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால், குடிமக்களின் சேவைக்காக அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்ட தினத்திலும், இதற்காக நியமிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட அலுவலர் தமது அலுவலகத்தில் பணியில் இல்லாமல் இருப்பது மிகுந்த கவலையும் ஏமாற்றமும் அளித்துள்ளது.
மேலும், அங்கிருந்த ஏனைய அதிகாரிகள் எடுத்த தொலைபேசி அழைப்பில், அவர் கணக்காளர் அலுவலகத்தில் இருப்பதாக கூறப்பட்டபோதும், 1மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த நிலையிலும் அவர் வருகை தரவில்லை.
பின்னர் மீண்டும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது,
‘யானை விரட்டும் வெடிகள் தீர்ந்துவிட்டன களஞ்சியத்தில் இல்லை வனவளத் திணைக்களத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்; எப்போது வரும் என்பது தெரியாது’எனப் பொறுப்பற்ற முறையில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு மூன்று விவசாயிகள் யானை விரட்டும் வெடிகளை பெறுவதற்காக வந்து நீண்ட நேரம் காத்திருந்தனர். அவர்களுக்கும் எந்தவிதமான முன் அறிவிப்பும், விளக்கமும் வழங்கப்படவில்லை.
இங்கு எழும் முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத கேள்விகள்:
- காட்டு யானைகளால் வருடந்தோறும் ஏற்படும் பயிர் அழிவுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் பிரதேச செயலகத்தில் இல்லை எனில், அது ஒரு மிகப்பெரிய நிர்வாகத் தவறாகும்.
- அந்த புள்ளிவிவரங்கள் இருந்தும், ஒவ்வொரு போகத்திற்கும் தேவையான அளவு யானை விரட்டும் வெடிகளை முன்கூட்டியே பெற்றுக் களஞ்சியப்படுத்தத் தவறியமை யாரின் பொறுப்பு?
- விவசாயிகள் அவசர நிலையில் பாதுகாப்பு உதவிக்காக வரும்போது,
‘தெரியாது’, ‘இல்லை’, ‘எப்போது வரும் தெரியாது’
போன்ற பதில்கள் வழங்கப்படுவது ஒரு அரச நிறுவனத்திற்கு ஏற்ற நடத்தைதானா?
தற்போது பிரதேசத்தில் நெல் செய்கை மிகவும் முக்கியமான, தீர்மானிக்கக்கூடிய கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் வனவிலங்குகளால் பயிர்கள் அழிவடைவது என்பது விவசாயிகளின் உழைப்பை மட்டுமல்ல, அரசாங்கத்தின் விவசாயக் கொள்கைகளையும் கேள்விக்குள்ளாக்கும் ஒரு நிலைமை ஆகும்.
ஒரு விவசாயி இந்த விடயம் தொடர்பாக பிரதேச செயலகத்திற்கு வரும்போது, அவர்
தனது நேரத்தை, தனது வருமானத்தை, தனது உழைப்பை விரயம் செய்து வருகிறார்.
அவருக்குத் தேவையான தகவல்களை தெளிவாகவும் பொறுப்புடன் வழங்குவது, மேலும் பயிர் பாதுகாப்பு உதவிகளை காலத்துக்குள் வழங்குவது பிரதேச செயலகத்தின் அடிப்படை கடமையாகும்.
எனவே, உடனடியாக போதுமான அளவு யானை விரட்டும் வெடிகளை பெற்றுக் களஞ்சியப்படுத்தி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவும்
சம்பந்தப்பட்ட அலுவலரின் அலட்சியச் செயற்பாடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தவும்;
எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாத வகையில், ஒவ்வொரு போகத்திற்கும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு தெளிவான நடைமுறையை உருவாக்கவும்
குடிமக்கள் சேவை தினங்களில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கட்டாயமாக பணியில் இருப்பதை உறுதி செய்யவும்;
மேற்கண்ட விடயங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இதனை மாவட்ட செயலாளர், சம்பந்தப்பட்ட மேலதிக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதைத் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
