Monday, May 19, 2025
HomeUncategorized15ஆவது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலுக்கான அழைப்பு!

15ஆவது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலுக்கான அழைப்பு!

ஈழத்தமிழினம் நினைவுகளை மட்டும் ஆயுதமாக்கவில்லை.விடுதலைக்கனவினை நம்பிக்கை இயங்கியலாக்கி இலக்கு நோக்கிப் பயணிக்கின்றது- 15ஆவது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலுக்கான அழைப்பை விடுத்துள்ள நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு 

தமிழினப்படுகொலையின் 15 ஆவது ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வுக்காக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைந்துள்ள பகுதியில் இன்றையதினம் சிரமதான பணியும் நினைவேந்தல் நிகழ்வுக்கான  அழைப்பும் விடுக்கும் ஊடக சந்திப்பும் இன்று மாலை இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பை சேர்ந்த இணைத்தலைவர்களில் ஒருவரான தென்கயிலை ஆதீனத்தை சேர்ந்த  தவத்திரு அகத்தியர் அடிகளார் 15 ஆவது இனப்படுகொலை நினைவேந்தலுக்கான அழைப்பை ஊடகங்கள் வாயிலாக விடுத்தார் .

15 ஆவது இனப்படுகொலை நினைவேந்தலுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின்  அழைப்பு வருமாறு ,

 தமிழினப்படுகொலையின் 15வது நினைவேந்தல் நாள் அழைப்பு 

 15 முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப்படுகொலை உச்சந்தொட்டு இவ்வருடம் 15வது ஆண்டு. ஈழத்தமிழினத்தின் அடக்குமுறைக்கெதிரான விடுதலைப்போராட்டத்தின் ஆயுதப் போராட்டப் பரிமாணத்தை பல்வேறு சக்திகளின் துணை கொண்டு சிறீலங்கா அரசு மௌனிக்கச் செய்து இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது. 

 தமிழ்த்தேசியத்தின் நம்பிக்கையில் உறுதி கொண்டு தமிழர் விடுதலைப்போராட்டத்தின் வடிவங்களை மாற்றி தொடர்ந்தும் விடுதலைக்காக ஈழத்தமிழினம் பயணிக்கின்றது என்பது, விடுதலையின் மீது கொண்ட பேரவாவின் பிரதிபலிப்பு. 

 ஈழத்தமிழினத்தின் நீதி வேண்டிய பயணமும், தொடர் போராட்ட முன்னெடுப்புகளும் நீதியின் கதவை எப்போதுமே தட்டிக்கொண்டேயிருக்கப்போகிறது. மனித உரிமைக்காவலர்கள் என்று மார் தட்டிக்கொள்பவர்களின் வெள்ளைச்சாயம் தமிழினப்படுகொலையில் வெளுக்கத்தொடங்கி தற்போது காசாவில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் பலஸ்தீனப்படுகொலையில் கட்டங்கட்டமாக அப்பட்டமாக தோலுரிக்கப்படுகிறது. 

 மனித உரிமை சாசனத்தை ஒரு கையிலும்,கொலைக்கருவியை இன்னொரு கையிலும் கொண்டு சனநாயகம் போதிப்பவர்களின் அபத்தம் வெளிக்கிளம்புகிறது. ஈழத்தமிழினம் நினைவுகளை மட்டும் ஆயுதமாக்கவில்லை.விடுதலைக்கனவினை நம்பிக்கை இயங்கியலாக்கி இலக்கு நோக்கிப் பயணிக்கின்றது. நீதிக்கான தொடர் தேடலும் ஓர் ஆயுதமே என்பதை ஆர்மேனியா தொடக்கம் பலஸ்தீனம் வரைக்கும் விடுதலைப்போராட்டங்களின் வரலாறு எமக்கு சொல்லித்தருகின்றது.

 பேரவலத்தை நினைவு கூருவதற்கு அப்பால், ஈழத்தமிழினம் விடுதலைக்காய் தியாகித்தவர்களின் கனவுகளின் நினைவுகளைச் சுமந்து பயணிக்கின்றது. முள்ளிவாய்க்கால் ஒரு பேரவலத்தின் குறியீடு மட்டுமல்ல.அடக்குமுறை எதிர்ப்பின் நம்பிக்கையின் குறியீடு விடுதலைப்போராட்டத்தை வெற்றி/தோல்வி என இருமைக்குள் வரையறுத்துவிட முடியாது. 15வது ஆண்டின் நினைவேந்தல் ஒழுங்குமுறைகளை தயார் செய்யும்ஈழத்தமிழினம், முள்ளிவாய்க்கால் தரும் விடுதலை நம்பிக்கையின் நினைவுகளை மக்கள் மயப்படுத்தப்பட வேண்டிய கால கட்டத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. விடுதலை நம்பிக்கையின் நினைவுகளை மக்கள் மயப்படுத்துவதென்பது, ஒரு அமைப்பின் நிகழ்ச்சித்திட்டமல்ல. 

ஒவ்வொரு ஈழத்தமிழனதும் வரலாற்றுக்கடமையும் உரிமையும் கூட. இதை நினைவில் கொண்டு, இன்றுவரை நீதி வழங்கப்படாத இனப்படுகொலையின் இவ்வாண்டிற்கான நினைவேந்தல் 05. 18 இல் முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும். எனவே அனைவரும் பேதங்களைத் துறந்து, சுயலாப,சுய விளம்பரப் படுத்தல்களைக் கடந்து எமது பொது நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபட்டு தமிழர்களாக இந் நினைவேந்தலில் ஒன்றிணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் அன்று மாலை 6மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் கோவில்களிலும் மணி ஒலி எழுப்புவதுடன் அன்று இயலுமான வரை முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் பரிமாறி தமிழின அழிப்பினை நினைவு கூருவோம். 

 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வடக்குக் கிழக்கு.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments