கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறப்புற நடைபெற்ற ”புத்தரிசி பெருவிழா” நிகழ்வு
நெல் அறுவடை காலப்பகுதியில் விவசாயக் குடி மக்களால் முதல் அறுவடையில் பெறுகின்ற நெல்லை அரிசியாக்கி புத்த பெருமானுக்கு தானம் வழங்கும் வழக்காறு நிகழ்வு வருடா வருடம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டு 57 வது ”புத்தரிசி பெருவிழா” நிகழ்வு நாடளாவிய ரீதியல் நடைபெற்று வருகின்றது. இதன் செயற்பாடாக கடந்த (27) காலை 10.00 மணியளவில் ”புத்தரிசி பெருவிழா” நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் திரு.ஆர்.பரணிகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் புத்தரிசி தானம் வழங்கும் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி ச.யாமினி, ஒட்டுசுட்டான் உதவிப் பிரதேச செயலாளர், ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர், ஏனைய உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள், விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.