நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் அமைந்துள்ள பதின்மூன்று குடும்பங்களின் அத்தியாவசிய தேவையாக இருந்த குடிநீர் பிரச்சினையை இன்றைய தினம் (28) நிறைவேற்றியுள்ளனர்.
கள்ளப்பாடு மக்களின் பங்களிப்புடன் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் மேற்கொள்ளப்பட்ட இலவச குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் நிறைவடைந்து இன்றை நாளில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தற்போது பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் குறிப்பாக இரத்ததானம் வழங்குதல் மரநடுகை , மக்கள் பங்களிப்புடன் இலவச குடிநீர் வழக்கும் திட்டம் எனப் பலவற்றை மேற்கொண்டுவருகின்றனர். இன்றைய நாளிலும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட கட்டடத்திற்கு முன்பகுதில் மரநடுகை செயற்பாடு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ.உமாமகேஸ்வரன் , வட மேல் மற்றும் வட மாகாண நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதம முகாமையாளர் திரு.பாரதிதாசன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், கிராம அலுவலகர் , ஊனைய உத்தியோகத்தர்கள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.