வெடுக்குநாறி மலை கைது சம்பவத்துக்கு முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்
இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
இலங்கையின் வடமாகாணத்தில் தொன்று தொட்டு எமது மூதாதையர்களின் வழியில் இந்துக்களாகிய நாம் சைவத்தையும் தழிழையும் எமது இரு கண்களாகப் போற்றிப் பாதுகாத்து வருகின்றோம்.
அந்த வழியில் எமது மூதாதையர்களினால் பாதுகாத்து எம்மிடம் கையளிக்கப்பட்ட பொக்கிஷங்களாக முல்லைத்தீவு, செம்மலை கிழக்கில் அமைந்துள்ள நீராவியடிப்பிள்ளையார் கோயில், முல்லைத்தீவ தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை ஆதி ஐயானார் ஆலயம், முல்லைத்தீவு வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயப் பரியலம் வழிவெட்டும் இடம், வவுனியா நெடுங்கேணி, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இவ் ஆலயங்கள் அனைத்தும் எம்மால் வழிபாடு செய்யப்பட்டு வருகின்ற இந்த வேளையில் அவ்வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்து இராணுவ, பொலிஸ் பிரிவுகளை ஏவிவிட்டு இலங்கை அரசானது எமது தொன்மையை சிதைத்து தனது பௌத்த மேலாதிக்கத்தை வேரூன்ற வைக்க முனைகின்றது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக அண்மையில் மகா சிவராத்திரி தினத்தன்று எமது வெடுக்குநாறி ஆதிலிங்ஆகஸ்வரர் ஆலயத்தில் பூஜை நடாத்தச் சென்ற பூசகரையும் அவரோடு சென்ற நிர்வாகத்தினரையும் எந்தவித குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்காது கைது செய்துள்ளனர். அத்தோடு அங்கு சென்ற பக்தர்களையும் துன்புறுத்தி அவர்களின் வசதிக்காகக் கொண்ட சென்ற உதவியளிக்கும் பெருட்களையும் தூக்கியெறிந்து துன்பப்படுத்தியுள்ளனர்.
நீதிமன்றத்தினால் அனுமதியளிக்கப்பட்ட வழிபாட்டு உரிமையைக்கூட தூக்கியெறிந்து நீதித்துறையைக் கேள்விக்குறியாக்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட எம் அடியவர்களின் வழக்கினைச் ஜோடிப்பதற்காக தொல்பொருட் திணைக்களம், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் போன்ற நெருப்பெடுத்துக் கொடுக்கும் மந்திரிகளின் உதவியை நாடி இல்லாத குற்றச் சாட்டுக்களைச் சுமத்தி இன்று அவர்களை சிறையில் தள்ளியுள்ளனர்.
ஸ்ரீலங்கா அரசு இதுபோன்ற அடாவடித்தனங்களை யாழ்ப்பாணம், மன்னார். திருகோணமலை. மட்டக்களப்பு போன்ற இடங்களில் பௌத்த திணிப்புக்களைச் செய்து வர எத்தனிக்கின்றது. பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எங்கள் மீது மதரீதியாகவும், மொழிரீதியாகவும், இனரீதியாகவும் இத் திணிப்புக்களை மேற்கொண்டு எம்மை மண்டியிட வைக்கத்துடிக்கும் இலங்கை அரசினதும், அந்த அரசின் அடாவடித்தன இயந்திரங்களின் நடவடிக்கைகளையும், நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
எந்தவித நிபந்தனைகளும் இன்றி எமது அடியவர்களை விடுதலை செய்து இலங்கை அரசின் நீதித்துறை
தனது நல்லெண்ணத்தைக் காட்ட வேண்டும். இல்லையேல் எமது மக்களினதும், புலம்பெயர்ந்து வாழும் எமது
உறவுகளின் சீற்றத்திற்கும் ஆளாகி சர்வதேசத்தின் முன் கை கட்டிக்கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படும்
என்பதை அரசுக்கு எடுத்துக்கூறி எமது கண்டனத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்துகின்றோம்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது