முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் கமக்கார அமைப்பின் கீழ் கடந்த காலபோகத்தில் ஏற்பட்ட தொடர்மழையினால் மேற்கொள்ளப்பட்ட விவசாய செய்கைக்கு அழிவு நட்டஈட்டினை பெற்றுத்தருமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கமக்கார அமைப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.
கோம்பாவில் கமக்கார அமைப்பின் கீழ் 250 ஏக்கரில் 2023 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்செய்கை கைவேலி,ஆற்றுப்பிலவு,குரங்கிருப்பான் போன்ற வயல் வெளிகளில் செய்கை பண்ணப்பட்டுள்ளது.
இரண்டு தடவைகளுக்கு மேல் மழைவெள்ளப்பெருக்கினால் விவசாய செய்கை முற்றுமுழுதான அழிவினை சந்தித்துள்ளது
இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் கமக்கார அமைப்பினர் முன்வைத்த கோரிக்கையில்
கடந்த 2023.12.25 பிரதேச செயலாளரிடம் சென்று விவசாயிகள் உரையாடியபோது முற்று முழுதாக எமது பிரதோம் அழிவைச் சந்தித்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
அழிவினை மதிப்பீடு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து அழிவினைப் பார்ப்பதற்காக கமதல காப்புறுதி சபையினரின் மதிப்பீட்டாளர்கள் வருகை தந்தனர்.
அவர்கள் வாகனத்தில் வந்து ஏ35 வீதியில் நின்று பார்வையிட்டதன் பின்னர் கோம்பாவில் கமக்கார அமைப்பிற்குட்பட்ட வயல்வெளிக்கு அழிவில்லை என்று கூறிவிட்டு அவசர அவசரமாக புறப்பட்டு சென்றுவிட்டார்.
தொடர்ந்து நாங்கள் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் முறையிட்டதை ஏற்றுக்கொண்டு விவசாய போதனாசிரியர், கமநலசேவை நிலைய உத்தியோகத்தர் எமது வெளிக்கு வருகை தந்து பார்வையிட்டதன் பின்னர் அவர்கள் முற்று முழுமையாக பார்வையிட்டு மொத்தமாக 42 ஏக்கர் மாத்திரமே அழிவிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதனையும் மாவட்ட காப்புறுதி உதவி பணிப்பாளர் மறுத்துள்ளார் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆகவே விவசாயிகள் முழுமையான காப்புறுதி செய்தவர்களும் உள்ளனர் எனவே எங்கள் கருத்தினை கருத்திற் கொண்டு எங்கள் பிரதேச அழிவினை ஏற்றுக் கொண்டு அழிவு நஷ்ட ஈட்டினைப் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.