முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியின் சுமார் 3.5 கிலோமீற்றர் தூரம் கொண்ட வடிகால் துப்பரவு செய்வதற்கு பிரதேச அனர்த்த முகாமைத்துவ கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த வடிகால்பகுதியில் பாரியளவிலான நீர் தாவரங்கள் காணப்படுவதால் இனிவரும்காலம் மழை காலம் என்பதால் அதனை அப்புறப்படுத்தி வடிகாலை சீர்செய்தால்தான் நீர்; வழிந்தோடக்கூடிய நிலமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு அதனை சீர்செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியில் நிலைகொண்டுள்ள படையினரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரும் இணைந்து இதனை துப்பரவு செய்யும் நடவடிக்கையினை 10.11.23 அன்று முன்னெடுத்துள்ளார்கள் இதன்போது வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இந்த வீதியின் வடிகால் பகுதியினை புனரமைப்பதற்கு பாரியளவிலான நிதி தேவைப்படுவதால் வடிகால் புனரமைப்பு பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன.
இராணுவத்தினருடன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கனரக இயந்திரம் கொண்டு புனரமைப்பு பணிகளை படையினர்தொடக்கிவைத்துள்ளபோதும் முழுமையடையாத நிலையில் நிதி பற்றாக்குறையினால் இது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையிடனம் மனிதவலுவும்,இயந்திர பற்றாக்குறையும் காணப்படுவதுடன் அதற்கான நீதியும் இல்லாத நிலை காணப்படுவதாகவும் வீதி அபிவிருத்தி திணைக்களம்தான் இதற்கான நிதியினை பரிந்துரை செய்து வடிகாலினை புனரமைக்கவேண்டும் என பிரதேச சபை செயலாளர் தெரிவித்துள்ளார்.