போதைப்பொருளை ஒழிக்க தகவல்களை தாருங்கள் இரகசியம் பேணப்படும் என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தெரிவித்தார்.
கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் முகமாகஜனசபா அங்குராப்பண நிகழ்வு (21.10.2023) புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,மேலும் கருத்து தெரிவிக்கையில்,புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு கடமைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. கூடுதலாக கசிப்பு போதைப் பொருளுக்கு உட்படுகின்ற பிரதேசமாக புதுக்குடியிருப்பு புதிய குடியிருப்பு கிராமமே இருக்கின்றது.
தினந்தோறும், வாரம்தோறும், மாதந்தோறும் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வழக்கு தாக்கல்களை செய்து வருகின்றோம். அதற்கான சாட்சியங்கள் எங்களிடம் இருக்கின்றது.
பொலிஸ் என்ற அடிப்படையில் கசிப்பை நிறுத்துவதற்குரிய முன்னுரிமை வேலைகள் என்ன என்பது எங்களுக்கு தெரியும். பொதுச்சபையில் இவ்விடயத்தை பொதுமக்கள் கூறியமை எனக்கு சந்தோஷமாக இருக்கின்றது.
கிராமத்தில் இருக்க கூடிய அதிகமானோர் பொலிஸில் முறைப்பாடோ அல்லது தகவல்களோ வழங்குவதில்லை. இருப்பினும் அவ்வாறான இடங்களுக்கு எமது அதிகாரிகளை அவ்விடம் அனுப்பி முடியுமானவரை செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். சிலர் தகவல்களை வழங்கினாலும் அவர்களுடைய பாதுகாப்பினை உறுதிபடுத்தி சுற்றிவளைப்புக்களை மேற்கொள்கின்றோம்.
இச் செயற்பாடுகளுக்கு எல்லாம் இறுதியில் தீர்ப்பு வழங்கப்படுவது நீதிமன்றத்தில். மனித உரிமைகள், சட்டங்கள், மக்களுடைய பாதுகாப்பு ஆகிய விடயங்கள் கருத்தில் கொள்ளப்படும். தகவல்களை தாருங்கள் தற்போது கைது செய்யப்படுவதனை விட அதிகமானோர் கைது செய்யப்படுவார்கள். ஜனசபா செயற்குழுவினை உருவாக்கியமை இவ்வாறான பிரச்சினையை தீர்ப்பதற்கே, பிரச்சினைகளை எமக்கு அறியத்தாருங்கள் தகவல்கள் பாதுகாக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.
இதேவேளை புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் சில தீர்ப்புகள் மற்றும் மக்களின் பிரச்சினைகளில் வெளி நபர்களின் தலையீடு காணப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.