கொக்குத்தொடுவாய் வடக்கில் நூற்றுக்கணக்கான தென்னம்பிள்ளைகளை அழித்த காட்டுயானை
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் மக்களின் வாழ்வாதர பயிரான தென்னை மரங்களை அழித்துள்ளன.
நேற்று (13.10.23) இரவு குறித்த கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் தென்னந்தோட்டசெய்கையினையே வாழ்வாதராமக மேற்கொண்டுவரும் தெங்கு செய்கையாளர்களின் நூற்றுக்கு மேற்பட்ட பயன்தரு தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளது
கொக்குத்தொடுவாய் வடக்கு கிராமத்தில் தெங்கு செய்கையினை மேற்கொண்டுவரும் இராசேந்திரம்,மற்றும் சிவலிங்கம் ஆகிய இருவரின் தென்னந்தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் காய்த்து பயன் பெற்றுக்கொண்டிருக்கும் தென்னங்கன்றுகளை அழித்து நாசம் செய்துள்ளன.
இருவரின் தோட்டங்களுக்குள்ளும் சுமார் 110 தென்னை மரங்கள் இவ்வாறு யானைகளால் அழிக்கப்பட்டுள்ளன.
காய்த்துக்கொண்டிருக்கும் மரங்களையும் தள்ளிவிழுத்தி அதில் இருந்த தேங்காய்களையும் யானைகள் சாப்பிட்டுள்ளதுடன் பல தென்னங்கன்றுகள் குருத்து இழுத்து சாப்பிட்டுள்ளன.
தென்னம் பிள்ளைகளை வைத்து வளர்த்து அதில்இருந்து பயன் எடுத்துவரும் காலகட்டங்களில் காலத்திற்கு காலம் காட்டுயானைகளால் இவ்வாறு அழிவினை சந்தித்துள்ளதாக தெங்கு செய்கையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். வேலிகளை சேதப்படுத்தி தென்னந்தோட்டத்திற்குள் புகுந்துகொள்ளும் யானைகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போதைய பொருளாதார விலையேற்றத்தினால் அவற்றை சீர்செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக காணியின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
யானைகளினால் ஏற்படும் இவ்வாறான இழப்புக்களுக்கு அரசாங்கம் நிவாரம் வழங்கவேண்டுவதுடன் சரியான முறையில் யானைவேலிகளை அமைத்து கொடுத்து தெங்கு செய்கையாளர்களை ஊக்கிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.