தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய நினைவேந்தல் ஊர்திமீது, திருகோணமலை கப்பற்துறையருகே சிங்களக் காடையர்கள் மேற்கொண்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதல், இந்தநாட்டில் இனவாதத்தீ நீறுபூத்த நெருப்பாகவே இன்னமும் கனன்றெரிகிறது என்பதை இன்னுமொருமுறை நிரூபணம் செய்திருக்கிறது.
இருநாட்டு அரசுகளின் கவனத்தையும், ஈழத்தமிழர்களுக்கான அடிப்படை நியாயத்தையும் கோரி 36 ஆண்டுகளின் முன்னர் அகிம்சைப் போராட்டம் நடாத்திய, திலீபன் என்கிற தியாகியின் உருவப்படத்துக்கும், அதைத்தாங்கிய ஊர்திக்கும், அவ்வூர்தியோடு இணைந்து பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கும் இந்த நிலை என்றால், எந்தவித நியாயப்பாடுகளுமற்று இத்தனை ஆவேசமாய் இனவாதத்தைக் கக்கும் சிங்களவர்களோடு, இந்த நாட்டில் தமிழர்கள் இணைந்து வாழ்வது எத்தனை தூரம் சாத்தியமானது என்பது பற்றி, இனிமேலேனும் சர்வதேச சமூகம் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும்.
ஜெனீவா அமர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சமநேரத்தில், தமிழர்களையும், அவர்களது போரியல் நியாயத்தையும், இனத்துக்காக நிகழ்த்தப்பட்ட தியாகத்தையும் காலில் போட்டு மிதித்து, தங்களது அடக்குமுறை மனோபாவத்தை சிங்கக்கொடிகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ள சிங்களக் காடையர்களது செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழர்களது உணர்வுநிலைகள் குறித்தும், அவர்களது சுயாதீன உரித்துகள் குறித்தும் எப்போதும் கள்ளமெளனம் காக்கும் ஆட்சி அதிகாரபீடங்கள், இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நாம் துளியும் எதிர்பார்க்கவில்லை.
இருந்தபோதும், ஒரு சுதேசிய இனத்தின் அடிப்படை உணர்வுநிலைகளை வலிந்து சீண்டி, இரு இனங்களுக்குமிடையிலான முரண்நிலைகளை மீண்டும் மீண்டும் கொதிநிலைக்குத் தள்ளி அரசியல் லாபம் ஈட்டும் சக்திகள் இனங்காணப்பட வேண்டும். ஈழத்தமிழர்களது தன்னாட்சிக் கோரிக்கை நியாயபூர்வமானது என்ற செய்தியை சர்வதேச சமூகத்தின் செவிகளில் அறைகூவல் செய்வதற்கு இந்தச் சம்பவம் ஓர் சாட்சியமாய் அமைந்திருக்கிறது. இதன் விளைவென்பது, எமது மக்களிடத்தே இனம் குறித்த ஓர்மத்தை தணியாது தகிக்கச் செய்துகொண்டே இருக்கும் என்பதை சிங்களவர்களும் உணரும் காலமொன்று உருவாகியே தீரும்.
சிவஞானம் சிறீதரன்.
நாடாளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி.