மக்களுடைய படுகொலையை மறைப்பதற்கே அங்கங்கு புத்தர் கோவில்கள் அமைக்கப்படுகிறது!


மக்களுடைய படுகொலையை மறைப்பதற்கே அங்கங்கு புத்தர் கோவில்கள் அமைக்கப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று (28) முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உண்மையிலே மக்களுடைய எழுச்சி போராட்டம் வெற்றி அளிக்க வேண்டும். மக்களை படுகொலை செய்த இராணுவத்தினுடைய முகாமிற்கு அருகாமையிலே இப்போது மனித எச்சங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மன்னாரிலே மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அது தற்போது மூடப்பட்டிருக்கிறது. இவ்வாறு தொடர்ச்சியாக அழிக்கப்பட்ட மக்களுடைய மனித எச்சங்கள் கிளம்புகின்ற போது அதனை மூடி மறைக்கின்ற செயற்பாட்டிலே இலங்கை அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது. 

என்னை பொறுத்த மட்டிலே இந்த இராணுவ முகாம்கள் பெருப்பிப்பதற்கான காரணம் மனித எச்சங்களை மறைப்பதற்காகவோ என்னவோ தெரியவில்லை. அதே விட புத்தர் கோவில்கள் அங்கங்கே முளைப்பதற்கான காரணம் மக்களுடைய படுகொலையை மறைப்பதற்கான செயற்பாடுகளாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகப்படுகிறோம். 

ஆகவே இந்த போராட்டம் நிச்சயமாக உலக நாடுகளை ஈர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மக்களுடைய போராட்டமும் சரி எங்களுடைய இனத்தின் நிலங்கள் அபகரிக்கின்ற விடயங்களாக இருக்கலாம், எங்களுடைய இனத்தின் பிரச்சினையாக இருக்கலாம். இந்த கட்சிகள், வெறும் வாயளவிலே, உதட்டளவிலே தங்களுடைய கருத்துக்களை சொல்லாமல், ஒரு குடையின் கீழ் அணிதிரள்கின்ற போதுதான் நாங்கள் எங்களுடைய இனத்தின் பாதுகாப்பை காப்பாற்ற முடியும். 

ஆகவே இந்த சமயத்திலே நான் அறைகூவல் விடுகிறேன். மக்களுடைய நன்மைக்காக இந்த நிலத்திற்காக, பல போராளிகள் மாண்டிருக்கிறார்கள். பல இயக்கங்கள் இதற்காக அர்ப்பணிப்பை செய்திருக்கிறார்கள். 

ஆகவே இந்த விடயத்திலே, தமிழ் கட்சிகள் அனைவரும் தேசியத்தை நேசிக்கின்ற தமிழ் கட்சிகள் அனைவரும் ஒரு குடையின் அணிதிரண்டு எங்களுடைய மக்களுடைய, பிரச்சினைகளை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை இச் சந்தர்ப்பத்திலே கேட்டு கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *