குருந்தூர் மலையில் நாளை பொங்கல் !


முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில்  நாளைய தினம் (14) பொங்கல் நிகழ்வு ஒன்றை செய்யவுள்ளதாகவும் அனைவரும் அணிதிரளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழர்களால் இந்து ஆலயம் ஒன்று நிறுவப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அங்கு இனமுறுகல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்   தெரிவித்து நீதிமன்ற கட்டளைகளை மீறி அங்கு விகாரை கட்டுமான பணிகளை முன்னின்று  செயற்படுத்திய வெலிஓயா சப்புமல்தன்ன விகாரை ,மற்றும் குருந்தூர் மலையில்  சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரை ஆகியவற்றின் விகாராதிபதி   கல்கமுவ சாந்தபோதி தேரர் நேற்றுமுன்தினம் (11) முல்லைத்தீவு காவல்நிலையத்தில் மூவரின் பெயர்களையும் குறிப்பிட்டு முறைப்பாடு ஒன்றைப்  பதிவு செய்துள்ளார்.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் மயூரன் மற்றும் நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக மக்கள் பேரியக்கத்தின் இணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகிய மூவருக்கு எதிராக  இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கல்கமுவ சாந்தபோதி தேரர் முகநூலில் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சார்ந்த தமிழ்த் தீவிரவாதிகள் மற்றும் இந்துக் குருமார்களையும் இணைத்து மிகப்பெரிய பூஜை ஒன்றை நடத்தி ஆலயம் ஒன்றை நிறுவ இருப்பதாக  தகவல் கிடைத்துள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு எதிராக நாளை(14) சிங்கள மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (12)  துரைராசா ரவிகரன்   பிறிதொரு தேவைக்காக முல்லைத்தீவு காவல் நிலையம் சென்றபோது அவரை அழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த ரவிகரன்  “எவ்வாறாயினும்  நாளையதினம் (14) பூஜைகள் நடைபெறும் “ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *