யாழில் முல்லைத்தீவினை சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான இளைஞன் சுவர் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு!
முல்லைத்தீவு விசுவமடுவினை சேர்ந்த இளைஞன் யாழ்ப்பாணத்திற்கு கட்டிட பணிக்கு சென்ற நிலையில் – சுவர் இடிந்ததில் பரிதாபமாக மரணம்…

யாழ்ப்பாணத்தில் வீடொன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர், சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
முல்லைத்தீவு, இளங்கோபுரம் றெட்பான விசுவமடுவைச் சேர்ந்த 17 வயதுடைய ரவிச்சந்திரன் டிலக்சன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்ப வறுமை காரணமாக வேலை தேடி யாழ்ப்பாணம் வந்த குறித்த இளைஞர்; நேற்றைய தினம் குருநகர் – பாஷையூர் பகுதியில் பழைய வீடொன்றை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது ஒரு பக்க சுவரை இடித்துவிட்டு, அது விழும் நிலையில் இருந்தமையால் தப்பிப்பதற்காக அறையின் உள்ளே ஓடியுள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில் மற்றுமொரு சுவர் அவர் மீது சரிந்து விழுந்ததில், குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் உடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

