
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 22.12.2025 திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
2025 ம் ஆண்டு நடப்பகுதியில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதற்காக எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளாத நிலையில் வாக்கெடுப்பு மூலமாக தவிசாளர், உப தவிசாளர் தெரிவு கடந்த 26.06.2025 அன்று நடைபெற்றுள்ளது.
21 உறுப்பினர்களை கொண்ட கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் தவிசாளர் தெரிவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெற்றது.
21 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொண்ட நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் 11 வாக்குகளையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் 4 வாக்குகளையும் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் 5 வாக்குகளையும் பெற்றனர்.
இதேவேளை, உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் யோகேஷ்வரன் அனோஜன், சுயேச்சைக் குழுவாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர் வல்லிபுரம் வசந்தராசா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெற்றது
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் யோகேஸ்வரன் அனோஜன் 9 வாக்குகளையும், சுயேச்சைக் குழு உறுப்பினர் வல்லிபுரம் வசந்தராசா 6 வாக்குகளையும் பெற்றுக்கொள்ள ஆறு உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் யோகேஸ்வரன் அனோஜன் உப தவிசாளராக அறிவிக்கப்பட்டார்
அன்றில் இருந்து இன்றுவரை உபதவிசாளராக கடமையாற்றி வந்துள்ள நிலையில் தவிசாளராக கடமையாற்றி சி.லோகேஸ்வரன் கட்சியின் நடவடிக்கை காரணமாக நவம்பர் மாத இறுதிப்பகுதியில் தனது பதவியினை இராஜனாமா செய்துள்ளதை தொடர்ந்து உபதவிசாளர் சபையினை கொண்டு நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில் புதிய தவிசாளரை தேர்தெடுப்பது தொடர்பில் கட்சிகளின் தலைமைப்பீடங்களுக்கிடையில் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் எதிர்வரும் 22ம் திகதி தவிசாளரை தேர்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

