முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட பந்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் விபரங்கள் அடங்கிய படங்கள் வைக்கப்பட்ட மண்டபம் இன்று மக்கள் அஞ்சலிக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த மாவீரர் மண்டபம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மூன்று மாவீரர்களின் தாயார் ஒருவர் நாடாவினை வெட்டி திறந்துவைத்துள்ளதை தொடர்ந்து மாவீரர்களின் பொது கல்லறைக்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு உறவினர்கள் பொதுமக்கள் பெற்றோர்கள் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்கள்.
கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தி.கிந்துஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் ஊடகபேச்சாளர் க.சுகாஸ் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் அ.சுயாத்தன் பிரசாத்,புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கதலைவர் நவநீதன் உள்ளிட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.
குறித்த மாவீரர் மண்பத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த மாவீரர்கள் 529 பேரின் விபரங்கள் அடங்கிய படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த மண்டபம் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை மக்கள் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தலாம் என்றும் அறிவித்துள்ளார்கள்.
இதன்போது மாவீரர்களின் பெற்றோர்களுக்கு பழமரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன

