கனகராயன்குளத்தில் கணவருடன் சண்டை பொலிசாரிடம் முறையிடச் சென்ற பெண்ணை மோதிக் கொன்றுவிட்டு தப்பிய வாகனம்.
பிடிபட்டது எப்படி?
கனகராயன்குளம் பகுதியில் பெண் ஒருவரை மோதிக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றிருந்த வாகனம் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டதுடன் இருவரும் கைது செய்யப்பட்டனர். கனகராயன்குளம் பகுதியை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் கடந்த 16ஆம் திகதி இரவு கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்க சென்றுள்ளார்.
இதன்போது ஏ-9வீதியில் வைத்து வாகனம் ஒன்று அவரை மோதியதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்ப்படுத்திய வாகனம் நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச்சென்றிருந்தது.சம்பவத்தில் அந்தபகுதியை சேர்ந்த ம. இதயரஞ்சினி என்ற 32 வயதான நான்கு பிள்ளைகளின் தாயே உயிரிழந்திருந்தார்.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இந்த நிலையிலேயே விபத்தை ஏற்படுத்திய வாகனத்துடன் சாரதி மற்றும் உரிமையாளர் ஆகியோர் விசுவமடுப் பகுதியில் வைத்து வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர். வாகனத்தின் நிறம் உட்பட ஏனைய அமைப்புக்களை மாற்றியமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது