20..08.2025 முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களுக்கான 50 வீடுகள் அமைத்துக்கொடுப்பதற்கான அடிக்கல்லினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்கள் நாட்டிவைத்துள்ளார்.
அவுஸ்ரேலிய தமிழ் யூனியனின் நிதி பங்களிப்புடன் அவுஸ்ரேலிய தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தலா இருபது இலட்சம் பெறுமதியான 50 வீடுகள் அமைத்துக்கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அவுஸ்ரேலிய தமிழ் ஒன்றியத்தின் தலைவர் ந.றட்னராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் நிர்வாகம் சி.குணபாலன் மேலதிக மாவட்ட செயலாளர் காணி சி.ஜெயகாந்த், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ச.மஞ்சுளாதேவி,உதவி மாவட்ட செயலாளர் லி.கேகிதா,கரைத்துறைப்பற்று உதவி பிரதேச செயலாளர் சர்மி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளதுடன் வீட்டுத்திட்டத்தின் தொடக்க நிகழ்வான அடிக்கல்லினையும் நாட்டிவைத்துள்ளார்கள்.
இந்த வீட்டுத்திட்டத்தினை அவுஸ்ரேலியாவினை தளமாக கொண்டியங்கும் அவுஸ்ரேலிய தமிழ்யூனியன் நிதி உதவிகளை வழங்கிவைப்பதுடன் முள்ளிவாய்க்கால் கப்பலடி வீதியில் கரைதுறைப்பற்று பிரதே செயலாளரினால் சுமார் எட்டு ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளதுடன் வீடு காணிகள் அற்ற 50 பயணாளிகள் தெரிவும் பிரதேச செயலாளர் ஊடாகவே தெரிவு செய்யப்பட்டு சுமார் 20 இலட்சம் பெறுமதியான 50 வீடுகளும் கட்டிக்கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் அவுஸ்ரேலிய தமிழ் ஒன்றியத்தினால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தையல் பயிற்சி மற்றும் கணணி பயிற்சினை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்களும் விருந்தினர்களினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.



