Tuesday, May 20, 2025
HomeJaffnaமுள்ளிவாய்க்கால் பிரகடனம் 2025 !

முள்ளிவாய்க்கால் பிரகடனம் 2025 !

தமிழ் இன அழிப்பு வரலாற்றுச் செயன்முறையூடு முள்ளிவாய்க்காலில் உச்சந் தொட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 

இன்று வரைக்கும் கொல்லப்பட்ட இரத்தச் சொந்தங்களுக்கு நினைவு நடுகற்களின்றி அவர்கள் ஸ்ரீலங்கா அரசினால் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட மண்ணில் அவர்களின் இரத்தம் தோய்ந்த புனித பூமியில் அவர்களின் தேசத்திற்கான கனவுகளை அகவயப்படுத்தி  சுதந்திர வேட்கைக்கான மூச்சுக் காற்றுடன் கலந்து  எமது இன அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போரை வன்முறையற்ற வழியில் முன்னெடுக்க உறுதி பூண  முள்ளிவாய்க்கால் திடலில் இன்று ஒன்று கூடியுள்ளோம். 

சிங்கள-பௌத்த பேரினவாதம் இந்தத்தீவின் சக தேசமான தமிழர்களை அழிக்கவும் அடக்கியாளவும் வெற்றி கொள்ளவும் கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்ட வகையில் செய்துவரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் காரணமாக தமிழ்தேசம் படிப்படியாக அழிந்து வருகின்றது. இன அழிப்பு எதார்த்தத்தின் விளைவாக எமது இருப்பை பாதுகாப்பதற்கும் உரிமைகளைப் பெறுவதற்குமாக எழுந்த அசாத்தியமானதும் ஈகங்கள் நிறைந்ததுமான உரிமைப் போராட்டத்தினதும் விடியலுக்காக ஒரு தேசமாக நாங்கள் அணி திரண்டு நின்றதற்கானதுமான அடையாளமாகவும் உள்ள முள்ளிவாய்க்காலையும் நாம் இன்று நினைவு கூருகின்றோம்.

ஸ்ரீலங்காதீவில் சமூகங்கள் இனவாதமயப்படுத்தப்பட்டு ஜனநாயக வாக்குத் தெரிவினூடாக பிரதிநிதிகள் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட முறையிலிருந்து இன்னும் வரலாற்றை பின்நோக்கி நகர்த்துகின்ற போது  வெவ்வேறு அரசாட்சிப் பரப்புக்கள் ஒன்று சேர்க்கப்பட்டு மையத்தை நோக்கி அதிகாரங்கள் குவிக்கப்பட்டு ஒற்றையாட்சி அரசியல் அலகில் பெரும்பான்மையினரிடம் காலனித்துவம் ஆட்சியை கைமாற்றுகையில் தமிழ் இன அழிப்புக்கான வரலாற்றுச் செயன்முறை உருவாக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டதை வரலாறு தெட்டத்தெளிவாக ஆவணப்படுத்தியுள்ளது. 

தமிழ் இன அழிப்பில் பிரித்தானிய காலனித்துவத்தின் வகிபங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பிரித்தானிய காலனித்துவம் தனது பேரரசின் புவிசார் நலன்களுக்காக சிறி லங்காவின் கேந்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை தனது இராணுவ நலன்களுக்காகத் தக்க வைப்பதற்காக ஒற்றையாட்சி அரசியல் அலகாக கட்டமைத்தது. ஒற்றையாட்சி அரசியல் அலகு எப்போதுமே பெரும்பான்மான்மையிடம் அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளும். பிரித்தானிய காலனித்துவத்திடம் பரிசாகக் கிடைத்த ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்பை தமிழ் இன அழிப்பிற்கான ஒரு கருவியாக சிங்கள-பெளத்த பேரினவாதம் ஸ்ரீலங்காவின் சுதந்திரத்தின் பின்னான அரசியல் வரலாற்றில் பயன்படுத்தியது. 

19 ம் நூற்றாண்டில் நவீன சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதம்  காலனித்துவத்தின் அடக்குமுறை உத்திகளை உள்வாங்கி வன்வலுவை பயன்படுத்தி தமிழர் தேசம் மீதான பெரும் போரை திணித்தது. அப்போரை மகாவம்ச இதிகாச வரலாற்றுப் புனைவின் விவரணங்களுக்கூடாக நியாயப்படுத்திக் கொண்டது. இவ் வரலாற்று விவரணங்களுள் ஸ்ரீலங்கா ஒற்றையாட்சித் தன்மையை சரியெனக் காட்டி ஏக தேச-நாட்டை சிங்கள-பெளத்த நாடாக கட்டமைக்கஇ பூர்வீக தமிழர் தாயகத்தை அபகரிக்கின்ற அரசியல் செயற்திட்டத்தை முன்னெடுத்தது. 2009 ற்கு முன்னர் தமிழர் தாயகத்தை அபகரிக்கரிப்பதற்கு இராணுவ வன்வலுவைப் பயன்படுத்திய கொழும்பு அதிகார மையத்தை கையகப்படுத்திய அரசாங்கங்கள் 2009 க்குப் பின்னர் பௌத்த மதத்தையும்  அபிவிருத்தியையும்  மென் வலுவாகப் பயன்படுத்தி தமிழர் மீதான அடக்குமுறையையும் இ தமிழரின் பூர்வீக தாயகப் பரப்பான வடக்கு-கிழக்கையும் தொடர்ந்தும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பிற்கூடாக அபகரித்து வருவதும் தமிழர் தாயகத்தை சிங்கள பௌத்த மயமாக்குவதும் எம் கண்முன்னே நடந்தேறிக்கொண்டிருக்கின்றது. 

21 ம் நூற்றாண்டில் ஏக துருவ உலக ஒழுங்கிற்கான போட்டி பல முனைகளில் நடைபெற்றுக்கொண்டிருப்பதை அவதானிக்கும் போது ஏக துருவ பேரரசுக் கட்டமைப்பு தனது புவிசார் நலன்களுக்காக எந்த விலையையும் கொடுக்க தயாராகவுள்ளதை அன்று முள்ளிவாய்க்காலும் இன்று பலஸ்தீனமும் வெளிக்கொண்டு வருகின்றது. தமிழ் இனத்தின் அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டம் வெறுமனே ஸ்ரீலங்கா அரசிற்கெதிரான போராட்டம் மட்டுமல்ல ஏக துருவ பேரரசை கட்டமைக்க முயலும் உலக ஒழுங்கிற்கெதிரான போராட்டமும் என உணர்ந்த மேற்குலக வல்லாதிக்க சக்திகள் ஸ்ரீலங்கா அரசை கருவியாகப் பயன்படுத்தி தமிழ் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை 2009 இல் இரும்புக்கரம் கொண்டு மௌனிக்கச் செய்தது. தமிழ் இன அழிப்பில் ஸ்ரீலங்கா அரசு பிரதான குற்றவாளியாக அடையாளங் காணப்பட்டிருந்தாலும்  ஐக்கிய அமெரிக்காஇ ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் தமிழ் இன அழிப்பு குற்றப் பொறுப்பில் உடந்தையர்களாக அடையாளம் காணப்பட்டன. 

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஈழத்தமிழ் உறவுகளே! 

தற்போது அதிகாரத்திலுள்ள அரசாங்கம் தமிழ் இனத்தின் நில மீட்பை மையப்படுத்திய விடுதலைப் போராட்டத்தை இனவாதமாகச் சித்திகரிக்க முயற்சிக்கின்றது. இனவாதமாகச் சித்தரிப்பதன் மூலம் அதை உள்ளூர் பிரச்சினையாக சோடித்து ஈழத்து தமிழர்களின் தேசத்திற்கான அரசியல் வேணவாவையும் அரசியல் அறக்கோரிக்கைகளையும் இல்லாதொழித்து ஸ்ரீலங்காவை சிங்கள-பௌத்த ஏக அடையாளத்துடன் கட்டமைக்க முனைவதுஇ இத்தீவின் பல்லினத் தன்மையை சாகடிப்பதாகும். தற்போதைய அரசாங்கம் சிங்கள-பௌத்த பெருந் தேசியவாத விழுமியங்களை நிலை நிறுத்தி ஸ்ரீலங்காவை ஏக அரசியல் – மத – பண்பாட்டு நாடாக கட்டியமைப்பதன் மூலம் சிங்கள-பௌத்த மக்களுக்கு விசுவாசியாக காண்பிப்பதோடு ஏக துருவ பேரரசை கட்டமைக்க முயலும் உலக ஒழுங்கின் வல்லாதிக்கத்திற்கும் நம்பிக்கைக்கு பாத்திரமானதாகக் தோன்ற முயற்சிக்கின்றது. தமிழ் தேசம் வரலாற்றுப் பட்டறிவுக்கூடாக பயணித்தது என்பதை அண்மைய அரசியல் தெளிவுள்ள முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. 

தமிழ் இன அழிப்பு மறுப்பை தற்போதைய அரசாங்கமும் தனது அரசியல் நாடகத்தில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இன அழிப்பின் மறுப்பே இன அழிப்பின் இறுதி ஆயுதமாகும் என்ற வரிகள் தற்போது ஆட்சிக் கதிரையில் உள்ளவர்களுக்கும் பொருந்தும் என்பதையும் பதிவிட்டே ஆக வேண்டும். தமிழ் இன அழிப்பை நினைவு கூர்வதற்கான நினைவுச்சின்னங்களை கட்டமைக்க தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசத்திலும் தடையை அமுல் படுத்தி வருகின்றது. தமிழ் இன அழிப்பு பொறுப்பு கூறலிலும் அதற்கான நீதிப் பொறிமுறையிலும் அநுர அரசாங்கம் தட்டிக் கழிக்கும் போக்கை கையாண்டு வருவது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

ஸ்ரீலங்காவின் உள்ளூர் விசாரணைப் பொறிமுறையில் நம்பகத் தன்மையை இழந்த ஒட்டுமொத்தத் தமிழ் இனம் 2009 இலிருந்து சர்வதேச விசாரணைப் பொறிமுறையை கோரி வருகின்றது. தமிழ் இன அழிப்புக்கு நீதி வேண்டிய சர்வதேச விசாரணைப் பொறிமுறையின் அவசியத்தை வலியுறுத்துவதற்கான போராட்டங்கள் வினைத்திறனாக முன்னெடுக்கப்பட வேண்டிய காலத்திற்குள் தமிழ் இனம் வலிந்து தள்ளப்பட்டுள்ளது. 

தமிழ் இன அழிப்பு குற்றத்தை மலினப்படுத்துகின்ற செயன்முறையில் ஈடுபடும் தமிழ் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியவை மட்டுமல்ல அவை தமிழின விடுதலைப் போராட்டத்தின் திசையை மாற்றுவதோடு ஸ்ரீலங்கா அரசிற்கும் உலக வல்லாதிக்க சக்திகளுக்கும் விலை போனதாக வரலாறு அவர்களை நினைவு கொள்ளும். 

தற்போது ஆட்சி அமைத்த அநுர அரசாங்கம் தமிழ் இனத்தின் கூட்டு அரசியல் வேணாவை புறந்தள்ளி வருவதோடல்லாமல் தமிழ் தேசியத்தின் விழுமியங்கள் மீதான நம்பிக்கையை உடைத்து வருகின்றது. 

அதை ஒரு போர் முறையாக முன்னெடுக்கின்றது. தமிழ் தேசியத்தின் நம்பிக்கை விழுமியங்களை தற்போதைய உலக ஒழுங்கிற்கு பொருத்தப்பாடற்றதாக கட்டமைத்து தமிழ் இனத்தின் கூட்டு அரசியல் நம்பிக்கை மீதான உளவியல் போரை கட்டவிழ்த்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. தமிழ் தேசியத்தின் நம்பிக்கை மீது தொடுக்கப்படும் போர் ஈழத் தமிழினம் முள்ளிவாய்க்காலில் சந்தித்ததை விட மிகக்கொடூரமான போர் இ தமிழ் இனத்தின் கூட்டு இருப்பினதும் அதனது அடிப்படைப் பண்புகள் மீதும் தொடுக்கப்படும் போர். 

தற்போது எமக்குமுன் உள்ள வரலாற்றுத்தெரிவு தமிழ் தேசியத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தி அக் குடையின் கீழ் நம்பிக்கை வேறுபாடுகளுடன் அல்ல உத்தி வேறுபாடுகளுடன் ஒன்று கூடுவது. இது எம் இனத்திற்கு வரலாறு தரும் இறுதித் தெரிவாகவும் நோக்க வேண்டி இருக்கும். இவ் வரலாற்றுக் கடமையிலிருந்து தவறுவதை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. வரலாறு கொடுக்கும் இறுதி சந்தர்ப்பத்தை நழுவ விடாது தமிழ் தேசியத்தின் கீழ் ஒன்று கூடி தமிழ் இன அழிவிற்கான நீதி கோரி அதற்கான பெரு வழி வரைபடத்தை உருவாக்கி எமக்காகவும்இ எம் தேசத்திற்காகவும்இ தேச இன விடுதலைக்காகவும் இறந்து போன எம் மறவர்களையும்இ இரத்த சொந்தங்களையும் நினைவு கூர்வதோடல்லாமல் அவர்களது கனவு நனவாகஇ இந்த இரத்தம் தோய்ந்த மண்ணிலிருந்து உறுதி பூணுவோம். 

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஈழத்தமிழ் உறவுகளே!

முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின எழுச்சியின் அடையாளம். தமிழ் இன அழிப்பை முள்ளிவாய்க்கால் திடலில் நினைவு கூர்வது மீண்டும் எம்தினத்தின் எழுச்சியை சுட்டி நிற்கின்றது. ஈழத்தமிழ் இனமாக சிங்கள அரசு அடக்குமுறைக்கெதிராகவும சிங்கள ஒற்றையாட்சி அரசியல் அலகை தனது புவிசார் நலன்களுக்காக தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய பேரரசுக் கட்டமைப்பின் அடக்குமுறைக்கெதிராகவும் போராட அணிதிரள்வதை தவிர வேறு எவ்வித தெரிவும் எமக்கு முன் வைக்கப்பட வில்லை. 

இரத்தம் தோய்ந்த இம் மண்ணிலிருந்து போராட கனத்த காற்றுச் சுமந்து வரும் எம்மவர்களின் நினைவுகளின் மீதும் நாம் கொண்டிருக்கும் தமிழ் இன விடுதலை நம்பிக்கை மீதும் சபதம் செய்வோம். 

1.சிங்கள-பௌத்த மயமாக்கப்படும் தமிழ் தாயகத்தை தடுக்கவும்இ தமிழ் தேசியத்தை நாளாந்த வாழ்வியலாக்கவும் 

2. ஈழத்தமிழ் இன அழிப்பில் சர்வதேச நீதி வேண்டி அரச பொறுப்பையும் மேற்குலக நாடுகளின் உடந்தைத் தன்மையையும் வலியுறுத்தி குற்றவாளிகளை குற்றவியல் நீதி மன்றத்தின் முன் நிறுத்தவும்

3.தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்துக்குரியவர்கள் என்பதையும் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒரு போதும் பாரதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தவும்

4.கூட்டு ஈழத்தமிழர் இருப்பின் மீது கட்டவீழ்க்கப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பை தடுக்கவும்

5.தமிழ் தேசிய நம்பிக்கையின் உறுதி கொண்டு ஒரு குடையின் கீழ் தமிழ் இன அடக்கு முறைக்கெதிராக தமிழ் இன விடுதலையை நோக்கி முனைப்புடன் தொடர்ந்து போராட எமது மக்கள் பலத்தை நம்பி தொடர்ந்தும் அடிபணியாது போராடுவோம்.

மே 18 தமிழ் இன அழிப்பிற்கு எதிரான தேசிய எழுச்சி நாள் 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு வடக்கு-கிழக்கு.
மே 18. 2025

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments