சட்டவிரோத கடற்றொழிலை தடைசெய்ய முன்னின்றவரின் மோட்டார் சைக்கிள் எரிப்பு; உரியவர்களின் கவனத்துக்கு கொண்டுவருவதுடன், பாராளுன்றிலும் குரல்கொடுப்பேன் – ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முன்னின்று செயற்பட்ட மீனவஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணையத்தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம் என்பவரின் மோட்டார் சைக்கள், அண்மையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களால் எரியூட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி செயலகம், பிரதமர், கடற்றொழில் அமைச்சர் ஆகியோரிடம் இந்த விடயத்தினைத் தெரியப்படுத்துவதோடு, பாராளுமன்றத்திலும் இந்த விடயத்திற்காக குரல்கொடுக்கவுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தைக் கண்டித்து முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம், மீனவஒத்துழைப்பு இயக்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் 21.04.2025இன்று முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்றதுடன், ஆர்ப்பாட்டக் காரர்களிடமிருந்து மகஜர் ஒன்றினையும் பெற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தடைசெய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம், குறிப்பாக மீனவஇளைஞர்கள் தற்போது ஒன்றுசேர்ந்து செயற்பட்டுவருக்கின்றனர்.
இத்தகைய சூழலில் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதில் முன்னின்று செயற்பட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணையத்தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம் என்பவருடைய மோட்டார் சைக்கிள் அண்மையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களால் திருடப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் உரியவர்கள் பொலிசாரிடம் முறையிட்டுள்ளபோதும், இதுவரை பொலீசார் உரிய சட்டநடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. இந்தவிடயத்தில் பொலிசார் சட்டம் ஒழுங்கினைப் பாதுகாக்கத் தவறியுள்றதாகக் கருதுகின்றேன்.
ஜனாதிபதி தன்னுடைய தொடக்க உரையில்கூட சட்டம் ஒழுங்கு பாதுக்கப்படுமெனத் தெரிவித்திருந்தார்.
இந்த விடயத்தில் சட்டம் ஒழுங்கு காப்பற்றப்படாத காரணத்தினால், சட்டம் ஒங்கினை பாதுகாக்குமாறுகோரியே இங்கு மக்களோடு இணைந்து நாமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

எனவே சட்டம் ஒழுங்கினைப் பாதுகாக்கவேண்டியவர்கள் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
எதிர்வரும் மே மாதம் 08, 09ஆம் திகதிகளில் பாராளுமன்ற அமர்விருக்கின்றது. அந்தவகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி செயலகம், பிரதமர், கடற்றொழில் அமைச்சர் ஆகியோரிடம் இந்த விடயத்தினைத் தெரியப்படுத்துவதுடன், பாராளுமன்றத்திலும் இந்த விடயத்திற்கு குரல்கொடுப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன் – என்றார்.