மக்களை மையமாகக் கொண்ட அரச சேவை ஒன்றிற்காக மீள் திசையை நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவாக அரசாங்கத்தினால் அறிமுகம் செய்துள்ள “கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தினையும் கிராமிய வறுமையொழிப்பு உட்பட பல்வேறு அரச செயற்திட்டங்களை முல்லைத்தீவு மாவட்டத்தில் வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு ஏதுவாக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அரச சேவை தொடர்பான மக்களின் அபிப்பிராயங்கள் ஆலோசனைகளை நேரடியாகக்கேட்டறிந்து எதிர்காலத்தில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக கிராமசேவகர் பிரிவுரீதியான மக்கள் குறைகேள் செயற்திட்டத்தின் முதலாவது நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கள்ளப்பாடு தெற்கு கிராம சேவகர் பிரிவில் இன்று (01.01.2025) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் , உதவி மாவட்டச் செயலாளர் உதவிப் பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அனர்த்த முகாமைப் பிரிவின் உதவிப் பணிப்பாளர், திட்டமில் கிளையின் பிரதம அபிவிருத்தி உத்தியோகத்தர்,கள்ளப்பாடு தெற்கு கிராம சேவகர் மற்றும் கள்ளப்பாடு தெற்கு கிராம சமூக மட்ட அமைப்புக்களின் நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பின் போது கள்ளப்பாடு தெற்கு கிராமத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபானம் தொடர்பான விடயங்கள் உட்பட கிராம மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.