கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் (28) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது காலை 10.00 மணி தொடக்கம் பி.ப 3.00 மணிவரை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், நன்னீர் மீன்பிடியாளர்கள், கரையோர ஆழ்கடல் மீனவர்கள் முதலானோர் மற்றும் திருமுறுகண்டி ஆலய அபிவிருத்தி தொடர்பிலும் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
இதில் குறிப்பாக சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் பிரதான பிரச்சினையாக தொழில் செய்வற்கு மூலதனப் பிரச்சினை உண்டு என்பதை அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் மிக விரைவில் உரியவர்களுடன் பேசி அதற்கான ஏற்பாடுகளை செய்துதருவதாக உறுதியளித்தார்.
மேலும் நன்னீர் மீனவர்களின் பிரச்சினையாகக் காணப்படும் தண்ணிமுறிப்பு குளத்தின் மீன்பிடி தொடர்பில் அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது. இதற்கு தீர்வு காண்பதற்காக துறைசார்ந்த திணைக்களங்களின் பங்களிப்புடன் விரைவில் ஒரு தீர்வினை வழங்க முடியும் என தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு முத்தயன்கட்டு குளத்தின் மீன்பிடி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவற்றோடு ஆழ்கடல் மற்றும் கரையோர மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
தொடர்ந்து திருமுறுகண்டி பிள்ளையார் கோவில் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. முன்னர் ஆலயம் இருந்த நிலைமை தற்போது நடைபெறும் அபிவிருத்தி வேலைகள் , எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட்வுள்ள அபிவிருத்தி வேலைகள் தொடர்பிலும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு எஸ்.குணபாலன், மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட நீரியல் வளத்திணைக்களத்தின் பணிப்பாளர், மாவட்ட நன்னீர் மீன்பிடி இணைப்பளர், ஏனைய துறைசார்ந்த உத்தியோகத்தர்கள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், மீனவர்கள், தொழில் முயற்சியாளர்கள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.