மாங்குளம் புகையிரத நிலையத்தில் ஆசன ஒதுக்கீட்டு வசதி மற்றும் கடுகதி புகையிரதம் நிறுத்திச் செல்ல வழிசெய்ய வேண்டும் க.கனகேஸ்வரன்
மாங்குளம் புகையிரத நிலையத்தில்
ஆசன ஒதுக்கீட்டு வசதி மற்றும் கடுகதி புகையிரதம் நிறுத்திச் செல்லல் ஆகிய சேவையை விஸ்தரித்தால் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் புகையிரத சேவையால் மிகவும் நன்மையடைவார்கள் என முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
மாங்குளம் புகையிரத நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற பயணிகளின் நலன் கருதி நூலக திறப்பு விழா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொகுதி கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
வடமாகாணத்திலே ஐந்து மாவட்டங்கள் இருக்கின்றது. ஐந்து மாவட்டங்களிலும் பெரிய மாவட்டமாக இருப்பது முல்லைத்தீவு மாவட்டம் .
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரேயொரு புகையிரத நிலையமாக மாங்குளம் புகையிரத நிலையமே இருக்கின்றது. ஏனைய புகையிரத நிலையங்களுடன் ஒப்பிடும் போது சேவை வசதிகள் மிகவும் குறைவான நிலையிலே காணப்படுகின்றது. அதனை உணர்ந்து கொண்டு புகையிரத நிலைய அதிபர்கள் தம் முயற்சியினால் மக்களுக்கு நல்ல முறையில் சேவை வழங்கக்கூடிய புகையிரத நிலையமாக அதனை மாற்ற முயற்சித்திருக்கின்றார்கள்.இங்கே நூலக வசதி , சுத்தமான குடிநீர் வசதி போன்ற நல்ல விடயங்களை செய்திருக்கின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாங்குளம் புகையிரத நிலைய சேவைகளை விஸ்தரிக்க வேண்டும். முல்லைத்தீவு மாவட்ட மக்கள் ஆசன ஒதுக்கீட்டை முற்பதிவு செய்ய வேண்டுமாக இருந்தால் கிளிநொச்சிக்கு அல்லது வவுனியாவிற்கு சென்றே பதிவினை மேற்கொள்கிறார்கள். அவ் வசதி மாங்குளத்தில் அமைய பெறுமிடத்து மாவட்ட மக்களுக்கு அது அனுகூலமாக அமையும்.
ஆசன ஒதுக்கீட்டினை முற்பதிவு செய்வதற்குரிய வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். அதனைவிட சாதாரண புகையிரதங்கள் நிறுத்தி சென்றாலும் அதிவேக புகையிரதங்கள் குறித்த புகையிரத நிலையத்தில் நிறுத்துவதில்லை. அதிவேக புகையிரதங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
ஆசனங்களின் ஒதுக்கீடு மற்றையது அதிவிரைவு புகையிரதத்தை மாங்குளத்தில் நிறுத்துவதற்கான முயற்சிகளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் தீர்மானமாக எடுத்து கொழும்பிலுள்ள புகையிரத அதிபர்களுக்கும் , ஜனாதிபதி செயலகத்திற்கும், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் அவ்விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவ்விரு சேவைகளும் மாங்குளம் புகையிரத நிலையத்திற்கு கிடைக்குமிடத்து முல்லைத்தீவு மாவட்ட மக்கள் இன்னும் பெரிதும் நன்மையடைவார்கள் என தெரிவித்தார்.