Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News யாழ்ப்பாணம்

வடக்கில் வீடுகளில் தங்குமிடசேவை வழங்குனர்களுக்கு ஆளுனரின் அறிவிப்பு!

சுற்றுலாப் பயணிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு.

சுற்றுலாப் பயணிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று (18/04/2024) விசேட கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு திணைக்களத்திலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் இதன்போது கூறினார். பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ ஆளுநர் கூறினார்.

அத்துடன் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான பொறிமுறையை வடிவமைக்குமாறும் கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *