Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

குருந்தூர்மலை அடியில் ஒரு ஏக்கரில்இந்து ஆலயத்திற்கும் ஒரு ஏக்கரில் பௌத்த ஆலயத்திற்கும் ஒதுக்கீடு?

வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீக தாயகம். தமிழர்களின் சொத்தாக குருந்தூர் மலையை நாங்கள் பார்க்கின்றோம். குருந்தூர் மலையில் வெளிப்பட்ட லிங்கமும் அதனை உறுதிப்படுத்துகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

இன்றையதினம் (30.09.2023) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

குருந்தூர்மலை விடயம் தொடர்பில் 18.01.2021 ஆம் ஆண்டு தொல்லியல் அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அவ் அகழ்வாய்வில் லிங்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  குறித்த லிங்கம் தொடர்பாக வரலாற்று பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட சின்னங்கள் 2300 ஆண்டுக்கு முற்பட்டவை என்பதை சின்னத்தில் உள்ள தமிழ் வரி வடிவ எழுத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன என வெளிவந்திருந்தன. 

குருந்தூர்மலை பேசப்படுகின்ற சின்னங்கள் பல்லவர் காலத்திற்குரியன என சிலர் கூறுகின்றனர். ஆனால் பல்லவர் காலத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை இவை அக்காலத்திற்கு முற்பட்டனவாகும்.

அங்கே செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் தெளிவாக தெரிகின்றது. அவை நாகர் காலத்தோடு தொடர்புடையவையாகும்.  நாகர்கள் வழிபட்ட சிவலிங்கங்கள் பனங்காமம், ஓமந்தை போன்ற இடங்களில் பெருமளவில் காணப்படுகின்றது. இங்கே காணப்படுவது சிவலிங்கம் என கூறுவது சால பொருந்தும்.

உறுதியாக கூறக்கூடியது என்னவென்றால் இது பழங்காலத்து லிங்க உருவம். லிங்க காலத்து ஆரம்ப வடிவமைப்பினை பிரதிபலிக்கின்ற வடிவம். நாகர்களின் கடவுளின் பெயர் எழுதப்பட்டுள்ள வடிவம் சைவ சமய சின்னமாக அமைகின்றது என்ற கருத்தை பேராசிரியர் தெளிவாக வழங்கியுள்ளார்.

இவற்றையெல்லாம் கூற காரணம். சிங்களவர்களே ஆதிகாலம் தொட்டு இருந்ததென்று பறைசாற்றிகொண்டு இருக்கும் நேரத்தில் இங்கே தமிழர்கள் தான் இருந்தார்கள் தமிழர் பூர்வீக தாயகத்திலே சைவ வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தொல்லியல் ஆய்வாளர்கள் இதனை உறுதிபடுத்தி இருக்கும் போது தங்களுடைய கருத்துகளை திணித்து எங்களுடைய மதத்தை அழிக்கும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் இவ்வாறான நிலை தான் இங்கே இருக்கிறது 

உறுதியாக சைவ வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட குருந்தூர் மலையில் ஆதிசிவன் ஐயன் ஆலயம் ஆதிகாலம் தொட்டு இருந்து வருகிறது என்பதனை இதனூடாக உறுதிப்படுத்துகின்றோம்.

காணி விடயங்களில் 12.05.1933 ஆம் ஆண்டு 78 ஏக்கர் 2 றூட் 13 பேர்ச் காணி தொல்லியல் ஆய்வுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மை. இதன் பின்னர் 306 ஏக்கர் காணி இவர்கள் தொடர்ச்சியாக கேட்டு வந்த நிலையில் அவ்வளவு ஏக்கர் ஏன் எனவும் 5 ஏக்கர் காணியை எடுக்குமாறு கூறியதாக ஜனாதிபதி கூறியதாக ஊடகங்களில் அறியக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு வர்த்தமானியில் 229 ஏக்கர் காணி இன்னும் மேலதிகமாக ஒதுக்கப்பட்டதாகவும் அது தொல்பொருள் காப்பு பகுதி எனவும் விவசாயம் அங்கே மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு வேறு இடங்களில் காணிகள் வழங்கப்படும் என்றும் கடந்த 2023.09.21 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டதாக ஊடகங்கள் ஊடாக அறியக்கூடியதாக இருந்தது. 

தெய்வ நம்பிக்கை உள்ள இடத்தினை கொச்சைப்படுத்த முடியாது. பூர்வீக சைவ இடம் தான் என்பதனை உறுதியாக குறிப்பிடுவதோடு வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீக தாயகம். தமிழர்களின் சொத்தாக குருந்தூர் மலையை நாங்கள் பார்க்கின்றோம். குருந்தூர் மலையில் வெளிப்பட்ட லிங்கமும் அதனை உறுதிப்படுத்துகின்றது. 

தற்போது ஒரு ஏக்கர் பௌத்தத்திற்காகவும், ஒரு ஏக்கர் சைவத்திற்காகவும், ஒரு ஏக்கர் பொது தேவைக்காகவும் என கடந்த 21 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. அதுவும் மலை அடிவாரத்தில் வேறே இடத்தில் தருவதாக கூறுவதற்கு இவர்கள் யார்? என்ற வினாவினை நான் கேட்க விரும்புகின்றேன். உதாரணத்திற்கு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு  கொண்டு சென்று வழிபடுங்கள் என்று இவர்கள் கூற முடியுமா? 

ஏனென்றால் இது எங்களுடைய பூர்வீக தாயக சைவ வழிபாட்டுக்குரிய இடம். குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் இருந்த இடம்தான் எங்களுடைய வழிபாட்டுக்குரிய இடமே தவிர, இவர்கள் தாங்கள் திட்டமிடுவதற்கும் வேறு இடத்தில் ஆலயம் அமைக்க கூறுவதற்குமான இடங்கள் அல்ல. பூர்வீக இடத்தில் நாங்கள் வழிபட வேண்டும்.

கடந்த 27.01.2021 ஆம் ஆண்டு சூலம் உடைக்கப்பட்டுள்ளதனை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு மேற்கொண்டிருந்தேன். அத்தோடு 29 ஆம் திகதி சூலம் இல்லை என்பதையும் முறைப்பாடு மேற்கொண்டிருந்தேன். முல்லைத்தீவு பொலிஸார் நேரடியாக பார்த்து உறுதிப்படுத்தியும் சம்பந்தப்பட்ட யாரையும் கைது செய்யாமல் பொலிஸாரும் உடந்தையாக இருந்து எங்களுடைய வழிபாட்டு சின்னங்களை மறைப்பதற்கும் , வழிபாடுகளை நிறுத்துவதற்குமான வேலைகளை தான் தொடர்ச்சியாக செய்து கொண்டு வருகிறார்கள் என மேலும் தெரிவித்தார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *