Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

கட்சியின் மறைந்த மாவட்ட அமைப்பாளருக்கு தேசப்பற்றாளர் கௌரவம் வழங்கி மதிப்பளிப்பு!

தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளராக இருந்து உடல் நல குறைவால் 14.11.2023 அன்று மறைந்த கணபதிப்பிள்ளை விஜயகுமார் அவர்களுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்ணியினரால் தேசப்பற்றாளர் என்ற கட்சியின் உயரிய விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளராகவும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னால் உறுப்பினராக இருந்து உயிரிழந்த க.விஜயகுமார் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு 15.11.2023 அன்று உடையார் கட்டில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கட்சியின் இணைப்பாளர்கள் கட்சியின் தொண்டர்கள் பொதுமக்கள் என பெருமளவானர்வகள் கலந்துகொண்டுள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களுகம் கலந்து கொண்டு அஞ்சலி செய்துள்ளார்கள்.

இதன் போது தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் அமரர் கணபதிப்பிள்ளை விஜயகுமார் அவர்களின் தமிழ்த் தேசிய கொள்கை சார்ந்த அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கு மதிப்பளித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவருக்கு “தேசப்பற்றாளர்” என்ற உயரிய கௌரவத்தை வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.
அன்னாரின் உடலம் உடையார் கட்டு வெள்ளப்பள்ளத்தில் தீயுடன்; சங்கமமானது 

அமரர் கணபதிப்பிள்ளை விஜயகுமார் அவர்களின் தமிழ்த் தேசிய கொள்கை சார்ந்த அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கு மதிப்பளித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவருக்கு “தேசப்பற்றாளர்” என்ற உயரிய கெளரவத்தை வழங்கி மதிப்பளிக்கின்றது.

2010 இல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்னும் எமது அரசியல் இயக்கம் ஸ்தாபிக்கப்பட்ட நிலையில், 2009 இன் பின்னர் – தனது ஸ்தாபகக் கொள்கையிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அதன் செயற்பாடுகளிலிருந்து விலகிச் செல்வதையும், நாங்கள் ஏன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகவேண்டி வந்தது? என்ற விளக்கங்களையும் ஊடகங்கள் ஊடாக நாங்கள் தெரிவித்துக்கொண்டு வந்திருந்த சூழலிலே, கூட்டமைப்பு தனது ஸ்தாபக கொள்கையிலிருந்து விலகி வருவது தொடர்பாக விஜயகுமார் அண்ணனுக்கும் புரிதல் ஏற்பட்டிருந்த நிலையில், எமது அரசியல் இயக்கத்தின் நிலைப்பாடும். விஜயகுமார் அண்ணனுடைய புரிதலும் ஒரு புள்ளியில் சந்தித்தபோது, எமது அரசியல் இயக்கத்துடனான தொடர்பு விஜயகுமார் அண்ணனுக்கு உருவானது. அவ்வாறான சூழலில் அவருடன் இடம்பெற்ற தமிழ்த் தேசிய அரசியல் விடயங்கள் குறித்த ஆழமான கலந்துரையாடல்களின் பின்னர், அவர் எங்களுடைய அமைப்போடு விரும்பி பயணிக்க ஆரம்பித்திருந்தார். 

எமது அரசியல் இயக்கத்தின் கொள்கை நிலைப்பாட்டுக்கும் ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தோடு அவருக்கு இருந்த தொடர்புக்கும் தமிழ்த் தேசம் சார்ந்த அவருடைய ஆழமான பற்றும் – அவரும் அவரது குடும்பமும் நேரடியாக வழங்கிய பங்களிப்பும் அர்ப்பணிப்புக்களும் அவரை எம்முடன் பயணிக்கச் செய்திருந்தது. 2009 இல் தமிழின அழிப்பின் மூலம் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், இராணுவமயமாக்கலுக்குள் சிக்கியிருந்த தமிழ்த் தேசம் பலமுனைகளிலும் பாரிய அழிவுகளையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்திருந்தது. தமிழ் அரசியலிலிருந்து தமிழ்த் தேசியத்தை நீக்கம் செய்யும் செயற்பாடுகள் தீவிரமடைந்திருந்தது.

 தமிழ் மக்களுடைய உரிமைக்குரல்கள் துப்பாக்கி முனையில் மௌனமாக்கப்பட்டிருந்தது. இவ்வாறு, நிலைமைகள் தமிழ்த் தேசத்தின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கியிருந்த நிலையில், அதற்கெதிரான பயணத்தில் எம்மோடு கரம் கோர்த்தவர். தமிழ்த் தேசத்தின் இருப்பை தொடர்ந்தும் தக்கவைப்பதற்கும், தமிழர்களுடைய உரிமையை பாதுகாப்பதற்கும் அதனை அடைவதற்குமாக தன்னை அர்ப்பணித்து உழைத்தவர். இதனால்தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் அவர் பயணிப்பதற்குரிய இணக்கப்பாடு உருவாகியிருந்தது.

இதன்பின்னர், முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளராகப் பொறுப்பேற்று, தமிழ்த் தேசத்தில் நடைபெறும் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகவும் குறிப்பாக, குருந்தூர் மலை ஆக்கிரமிப்புக்கு எதிரான தீவிர போராட்டத்திலும், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட எல்லைக் கிராமங்களை மீட்டெடுக்கும் போராட்டங்களிலும் மிகத் தீவிரமாகப் பங்காற்றியவர்.

விஜயகுமார் அண்ணன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய உறுப்பினராக இணைந்தபோது, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே உறுப்பினர்கள் இருந்தனர், எமது அரசியல் இயக்கத்தில் இணைபவர்கள் இளைஞர்களாகவே அதிகம் இருந்தார்கள்.

அவர்களில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்ட இளம் வயதினர் பலர், சில சந்தர்ப்பங்களில் உணர்ச்சிவசப்பட்டு செயலாற்ற முனைந்த சந்தர்ப்பங்களில் அவர்களை அமைதிப்படுத்தி நிதானப்படுத்தி – பக்குவப்படுத்தி எமது அமைப்பில் ஒரு தந்தையினுடைய வகிபாகத்தை எடுத்துக்கொண்டிருந்தார். அவருடைய வயதும் அனுபவமும், வழிநடத்தலும், எமது அமைப்பின் வளர்ச்சியில் ஆணிவேராய் இருந்தது. உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள், குழப்பங்கள் ஏற்படும்போதெல்லாம். தனக்கு தெரிந்த அனுபவத்தை வைத்து ஆலோசனைகளை வழங்கி மிகவும் நிதானமாக பிச்சினைகளைத் தீர்க்கும் தனித்துவ ஆளுமை விஜயகுமார் அண்ணனிடம் 
இருந்தது. 

சமாளிப்பு என்ற விடயத்துக்கு அப்பால் பிரச்சினைகளுக் முகம் கொடுத்து, முகம் கொடுக்கிற விதத்தை சரியாக அடையாளப்படுத்துவதன் ஊடாக  பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்ற ஒரு கலாசாரத்தை எங்கள் அமைப்புக்குள் முன்னின்று அவர் செய்து தந்தவர்.

2015 ஆம் ஆண்டிலிருந்து தேசப்பற்றாளர் இரத்தினவடிவேல் ஐயா (தம்பி அண்ணன்)வும் எமது அமைப்போடு சேர்ந்த போது முல்லைத்தீவு மாவட்டத்தில், விசேடமாக முல்லைத்தீவில் இவர்கள் இருவரது செயற்பாட்டால் முல்லைத்தீவு மாவட்டம் விசேட தன்மையை எமது அமைப்புக்குள் கொண்டிருந்தது. 

இவர்கள் இருவரும் தாயாகவும் தந்தையாகவும் எமது அமைப்பினுடைய உறுப்பினர்களோடு செயற்பட்டிருந்தனர். வெறுமனே அமைப்பு என்ற உறவைத் தாண்டியும் அமைப்பின் உறுப்பினர்களுடன் தனிப்பட்ட பாசத்தை வளர்க்கும் ஒரு நிலைமை இவர்கள் இருவரும் உருவாக்கி இருந்தனர். சவால் மிக்க அரசியல் பயணத்தில் எல்லா பக்கமும் இருந்து நெருக்கடிகளை சந்தித்த பொழுதுகளில் அவர்களுடைய உறவு எமது அமைப்புக்குள் ஆறுதலை ஏற்படுத்துகின்ற ஒரு சூழலை வைத்திருந்தது.

விஜயகுமார் அண்ணனின் மறைவு கொள்கை சார் அரசியல் தளத்தில் ஒரு பேரிழப்பாக அமைந்துள்ளதுடன், எமது அமைப்பு – வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவுக்கு, அவரது இடைவெளியை நிரப்பமுடியாத அளவுக்கு மிகப்பெரும் சொத்தை இழந்து தவிக்கிறது. ஒரு கொள்கை வகுப்பாளனை. மிகச்சிறந்த கொள்கைப் பற்றாளனை, தேசப்பற்றாளனை தமிழ்த் தேசம் இழந்திருக்கிறது.

இதற்கு அப்பால் எமது அரசியல் இயக்கத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும் தாயை, தந்தையை, அண்ணனை, நண்பனை, ஆலோசகனை, இழந்தது போன்ற நிலைமையை கனத்த இதயத்துடன் இன்று நாம் அனுபவிக்கின்றோம்.

விஜயகுமார் அண்ணனின் இழப்பு எமது அமைப்புக்கு ஈடுசெய்ய முடியாதது என்று சொல்லுவதைத் தாண்டியும் சொல்லணா வலிகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேசம் ஒரு மிக மிக நேர்மையான ஒரு தேசப்பற்றாளனை இழந்திருக்கின்றது.

விஜயகுமார் அண்ணன் எமது அமைப்புக்குள் பதவிகளுக்காக செயற்பட்டவர் அல்ல. தனது பெயருக்காகவோ, தனிப்பட்ட புகழுக்காகவோ, தனது தனிப்பட்ட நலன்களுக்காவோ தன்னை முன்னிலைப்படுத்தி ஒருபோதும் செயற்பட்டவர் அல்ல மாறாக, அமைப்பின் நலன் சார்ந்து புதியவர்களையும் உள்வாங்கி, அவர்களுக்கு
தலைமைத்துவங்களை வழங்கி அழகுபார்த்தவர்.

எமது கொள்கை நேர்மைத் தன்மை மக்களிடையே அங்கீகரிக்கப்பட்டு எமது அரசியல் இயக்கம் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இன்று உருவம் பெற்றிருந்தும் கூட, தேர்தல் அரசியலில் கூட தன்னை முன்னிலைப்படுத்தாமல் அமைப்பின் வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்பட்டிருந்தவர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வளர்ச்சி தமிழ்த் தேசத்து அரசியலுக்கு முக்கியம் என்ற வகையில் எமது அரசியல் இயக்கத்தை பலப்படுத்துவதற்காக அயராது உழைத்தவர் விஜயகுமார் அண்ணன்.

இந்த வகையில் – அமரர் கணபதிப்பிள்ளை விஜயகுமார் அண்ணனின் தமிழ்த் தேசிய கொள்கை சார்ந்த அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கு மதிப்பளித்து, எமது அரசியல் இயக்கமான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவருக்கு “தேசப்பற்றாளர்” என்ற உயரிய கௌரவத்தை வழங்கி மதிப்பளிக்கின்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.
தலைமைச் செயலகம்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *