கரைதுறைப்பற்று பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் கிளையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் குறை நிவர்த்தி நடமாடும் சேவையொன்று நேற்றைய தினம் (30) பிரதேச செயலாளர் இ. விஜயகுமார் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பிரதிப் பதிவாளர் நாயகம் ப. பிரபாகர் அவர்கள் கலந்து கொண்டு நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த பொது மக்களின் பிறப்பு, இறப்பு, விவாகம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கினார்.
காலம் கடந்த பிறப்பு பதிவுகள், இறப்பு பதிவுகள், திருமண பதிவுகள், உத்தேச வயது பத்திரங்கள் என 70 ற்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றமை சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் , மேலதிக மாவட்ட பதிவாளர், நன்னடத்தை உத்தியோகத்தர், கிராமிய பதிவாளர், கிராம உத்தியோகத்தர்கள், பாரதி சிறுவர் இல்ல உத்தியோகத்தர், பிரதேச செயலாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த நடமாடும் சேவைக்கு பெரண்டினா, முல்லைத்தீவு நிறுவனம் நிதி அனுசரணையினை வழங்கியிருந்தார்கள்.

