முல்லைத்தீவு – தியோகுநகர்ப் பகுதியில் கடந்த 26.05.2024ஆம் திகதி கரைதுறைப்பற்றுப் பிரதேசசபைக்குரிய மக்கள் பயன்பாட்டிலுள்ள வீதியை, அவலோன் எனப்படும் தனியார் நிறுவனம் அடாவடியாக வேலியிட்டுத் தடுத்தமையால், அப்பகுதியை சேர்ந்ந பொதுமக்கள், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அடாவடியாக வீதியைத் தடுத்து அமைக்கப்பட்ட வேலியையும் அப்புறப்படுத்தியிருந்தனர்.
அந்தவகையில் இதுதொடர்பில் அவலோன் நிறுவனத்தின் முறைப்பாட்டிற்கமைய முல்லைத்தீவு நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு 12.12.2024இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந் நிலையில் குறித்தவழக்கானது எதிர்வரும் ஜனவரிமாதம் 23ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு- கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட, சிலாவத்தை தெற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள தியோகுநகர் கிராமத்தில், கடந்த 26.05.2024 ஆம் திகதியன்று, கரைதுறைப்பற்றுப் பிரதேசசபைக்குரிய வீதியினை அவலோன் எனப்படுகின்ற தனியார் நிறுவனத்தினர் அடாவடியாக வேலிஇட்டுத் தடுத்திருந்தனர்.
இந் நிலையில் அவ்வீதியைப் பயன்படுத்துகின்ற தியோகுநகர் கிராமத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
எனவே அவலோன் எனப்படும் தனியார் நிறுவனத்தின் இத்தகைய செயற்பாட்டை கண்டித்து அப்பகுதி மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், வீதியின் குறுக்காக அமைக்கப்பட்ட வேலியையும் அப்புறப்படுத்தியுமிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து குறித்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு கரைதுறைப்பற்று பிரதேசசபை மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலக அதிகாரிகள் வருகைதந்து நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.
அதன்பின்னர் கரைதுறைப்பற்று பிரதேசசபை, பிணக்குக்குரிய குறித்த வீதி தம்முடையதெனவும், அதுதொடர்பில் வர்த்தமானி அறிவித்தலும் வெளிவந்துள்ளதாகவும் கடிதத்தின் மூலமும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இவ்வாறான சூழலில் அவலோன் தனியார் நிறுவன முகாமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டது.
இந் நிலையில் சமாதானக்குலைவு ஏற்படுத்தியதாகத் தெரிவித்து வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தியோகுநகர்கிராம மக்கள் 12பேர், அவலோன் தனியார் நிறுவன முகாமையாளர் ஆகியோருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றில் பொலிசாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கானது டிசெம்பர்.12 இன்றைய நாளுக்குத் திகதியிடப்பட்டிருந்தநிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்தவகையில் வழக்கு எண் 61183 என்னும் வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றில், நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கினை ஆராய்ந்த நீதிபதி, கரைதுறைப்பற்று பிரதேசசபை உரிமைகோரும் குறித்த வீதியினுடைய, வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை குறித்த வழக்கானது எதிர்வரும் ஜனவரி.23இற்குத் திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
…..