Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

பிரதேச சபையின் வாக்குறுதியால் போராட்டம் ஒத்திவைப்பு!

பிரதேச சபையின் வாக்குறுதியால் நாளைய போராட்டம் ஒத்திவைப்பு.

ஒரு மாத காலத்திற்குள் தீர்த்து வைக்க தவறின் போராட்டம் வெடிக்கும். எச்சரிக்கும் வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன்

பிரதேச சபையின் வாக்குறுதியால் நாளைய போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும்,

ஒரு மாத காலத்திற்குள் தீர்வினை பெற்றுத்தர தவறின் போராட்டம் வெடிக்கும் என புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் நவநீதன் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் , செயலாளர், வர்த்தக சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கிடையில் இன்றையதினம் (18.01.2024) புதுக்குடியிருப்பு பிரதேசசபையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 16ஆம் திகதி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் வேவலைத்திட்டங்கள், செயற்பாடுகள் குறைவடைந்து  இருந்தமையால் அது சார்ந்த விடயங்களை நாம் ஊடகத்தின்  கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம்.

அந்தவகையில் எமது கோரிக்கைகளிற்கு அமைவாக இன்றையதினம் புதுக்குடியிருப்பு பிதேசசபையின் செயலாளர், உப செயலாளர் எம்முடன் கலந்துரையாடி முடிவினை எடுப்பதற்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். அதற்கமைய கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் பின் எங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை  ஒருமாத காலத்துக்குள் நிறைவேற்றி தருவதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் எழுத்து மூலம் ஒப்புதல் கடிதம் வழங்கியிருக்கின்றார்கள்.

இந்நிலையில் ஒரு மாத காலப்பகுதிக்குள் நிறைவேற்றி தருவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் , எழுத்து மூல ஆவணத்தின் அடிப்படையிலும் நாளையதினம் நடாத்த இருந்த போராட்டத்தினை இடைநிறுத்தி ஒரு மாத கால அவகாசம் கொடுத்திருக்கின்றோம்.

குறித்த காலப்பகுதிக்குள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க தவறின் நாங்கள் மீண்டும் வர்த்தக சங்கத்தினை ஒன்றுதிரட்டி இவர்களுக்கு எதிரான போராட்டத்தினை நடாத்துவதில் எந்தவித மாற்றமும் இல்லை. 

எங்களுக்கு தந்துள்ள வாக்குறுதிகள் ஒருமாத காலப்பகுதிக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்புகின்றோம். ஏனெனில் கலந்துரையாடல் அவ்வாறானதாகவே அமைந்திருக்கின்றது. ஆதரவு தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதாக மேலும் தெரிவித்தார்.

இன்றைய கலந்துரையாடலில் குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் வர்த்தக சங்கத்தினருக்கு புதுக்குடியிருப்பு பிரதேசசபை செயலாளரினால் உத்தரவாதம் வழங்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு,

1) புதுக்குடியிருப்பு சந்தைத் தொகுதியில் ஏற்கனவே நில வாடகையில் வியாபாரம் செய்த 03 வியாபாரிகளுக்கு பிரதேச சபை 1987ம் ஆண்டு 15ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் நிரந்தர கடைகளை வழங்க முடியாததன் காரணத்தினால் அவர்களுக்கு பிரதேச சபையின் பொதுச் சந்தையினுள் உள்ள நிலவாடகை கடைகளினை ஒழுங்கமைத்து வியாபாரிகளுக்கு வியாபாரம் முன்னுரிமையான இடத்தில் நில வாடகையில் கடைகளை வழங்குதல் எனத் தீர்மானிக்கப்பட்டது.

2) புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் சிறுவர் பூங்காவில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாட்டினை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் பிரிவு மற்றும் வர்த்தகர் சங்கத்தின் ஒத்துழைப்பு கோரப்பட்டதுடன் அதன் மூலம் குறித்த சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

3) புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் பிரதான வாய்க்காலானது வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றுக்கு உரித்தானதாக காணப்படுகின்றது. எனினும் குறித்த இரு திணைக்களத்தினர் வாய்க்கால் துப்பரவு பணிகளில் ஈடுபடாதவிடத்து வெள்ள அபாயத்திலிருந்து ஏற்படும் விளைவுகளை கருத்திற்கொண்டு பிரதேச சபை மூலம் தேவைப்படுமிடத்து இயந்திர வசதி செய்து கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

4) 

கட்டாக்காலி மாடுகளினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளினை முன்னெடுப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பிரதேச சபை என்ற ரீதியில் வீதி விபத்துக்களை தவிர்க்கும் முகமாகவும் போது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு பிரதேச சபையினால் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்ப்பதற்கும் வர்த்தகர் சங்கம் மற்றும் பொலிஸ் பிரிவு என்பனவற்றின் உதவி கோரப்பட்டது. அவர்களின் ஒத்துழைப்புடன் குறித்த செயற்பாடு மேலும் வினைத்திறனாக செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *