Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் இரண்டாம் ஆண்டு நிகழ்வும், ஊடகவியலாளர் மதிப்பளிப்பும்!

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், போர்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மதிப்பளிப்பும் ஒக்ரோபர்(22)இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

முல்லைத்தீவு ஊடகஅமையம் கடந்த 2021ஆம் ஆண்டு புதியக கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் இவ்வாறு முல்லைத்தீவு ஊடக அமையம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. அந்தவகையில் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவுவிழாவும், போர்க்கால ஊடகவியலாளர் மதிப்பளிப்பு நிகழ்வும் முல்லைத்தீவு ஊடக அமையத்தலைவர் சண்முகம் தவசீலன் தவசீலன் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

விருந்தினர் மற்றும், போர்க்கால ஊடகவியலாளர் வரவேற்புடன் ஆரம்பமான இந் நிகழ்வில், தொடர்ந்து மங்கலவிளக்கேற்றல், விருந்தினர்களது உரை என்பன இடம்பெற்றன.

இவற்றைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கான உரிமைப்போர்க் காலப்பகுதியில் தமது உயிரைத் துச்சமென மதித்து ஊடகத்துறை மூலமாக மக்களது அவலங்களையும், உண்மை நிலைமைகளையும் உலகறியச்செய்ய அளப்பெரும் சேவையாற்றிய  முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த போர்க்கால ஊடகவியலாளர்கள் 15பேர் இதன்போது மதிப்பளிக்கப்பட்டதுடன், நினைவுச்சின்னங்களும், நினைவுப் பரிசிலும் வழங்கிவைக்கப்பட்டன.

அதனையடுத்து இந் நிகழ்வில் விருந்தினர்களாக கலந்துகொண்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம்,  ஊடகவிரிவுரையாளர் அமிர்தநாயகம் நிக்ஸன்,  சட்டத்தரணிகளான வீ.எஸ்.எஸ்.தனஞ்சயன், ருஜிக்கா நித்தியானந்தராசா ஆகியோரும் இதன்போது மதிப்பளிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

மேலும் இந் நிகழ்வில் வவுனியா ஊடக அமையத்தின் தலைவர் ப.கார்த்தீபன், போர்க்கால ஊடகவியலாளர்கள், முல்லைத்தீவு ஊடக அமைய ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *