சிவகுமார், தனபோகநாயகன் நினைவுக்கிண்ணத்தை வென்றது நியூ பாரதி!

0 123

முல்லைத்தீவு – முள்ளியவளை, சலஞ்சேஸ் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட சிவகுமார் மற்றும் தனபோக நாயகன் நினைவுக்கிண்ணக் கிரிக்கட் சுற்றுத்தொடரில், விஸ்வமடு நியூ பாரதி விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டி கிண்ணத்தினைச் சுவீகரித்துக்கொண்டது.

குறிப்பாக 30அணிகள் பங்குகொண்ட இக் கிரிக்கட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டிக்கு விஸ்வமடு நியூ பாரதி விளையாட்டுக்கழகமும், கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழகமும் தெரிவாகியிருந்தன.

இந் நிலையில் 05.05.2021அன்று கேப்பாப்புலவு, கிருஷ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழகத்தினர் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்திருந்தனர்.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழக அணியினர், 12ஓவர்களைக்கொண்ட போட்டியில், 07ஓவர்ளை மாத்திரம் எதிர்கொண்டு 34ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்ளையும் இழந்தனர்.

துடுப்பாட்டத்தில் கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழகம் சார்பில் மிராஜ் 08ஓட்டங்களையும், திலக் 06ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் நியூபாரதி விளையாட்டுக்கழகம் சார்பில் சோபன் 03 விக்கட்டுக்ளையும், சுதன், மிது, குணாளன், கின்சிலன்ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்ளையும் வீழ்த்தியிருந்தனர்.

இந் நிலையில் 35 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய விஸ்வமடு நியூபாரதி விளையாட்டுக்கழகத்தினர், நான்கு ஓவர்ளை மாத்திரம் எதிர்கொண்டு பத்து விக்கட்டுக்களால் வெற்றிபெற்றனர்.

துடுப்பாட்டத்தில்  நியூபாரதி விளையாட்டுக்கழகம் சார்பில் சதீஸ் 15ஓட்டங்களையும், சுதன் 13ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அதேவேளை இப்போட்டியில் மூன்று விக்கட்டுக்ளை வீழ்த்திய நியூபாரதி விளையாட்டுக்கழக வீரர் சோபன் இப்போட்டியின் ஆட்ட நாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

அந்தவகையில் இப்போட்டியில் வெற்றிபெற்ற நியூபாரதி விளையாட்டுக்கழகத்திற்கு சிவகுமார், தனபோகநாயகன் நினைவுக்கிண்ணமும் 30,000்ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டதுடன், கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழகத்திற்கு இரண்டாம் நிலைக்குரிய கிண்ணமும் 20,000ரூபா பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் விருந்தினர்களாக முன்னாள்  வடமாகணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம், கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர் க.விஜிந்தன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான சி.லோகேஸ்வரன், இ.ஜெகதீசன், சர்வோதயம் நிறுவனத்தின் பணிப்பாளர், மற்றும் முள்ளியவளை கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிவகுமார், தனபோகநாயகன் ஆகியோரின் பெற்றோர்கள் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.