இந்திய மீனவர்களின் சடலங்கள் காங்கேசன்துறையில் மீட்பு

0 22

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு ஒன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது குறித்த தகவல் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு கடற்படையினரால் நேற்று (20) அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் இரு சடலங்கள் மீட்கப்பட்டன.

அவை நேற்று முன் தினம் (19) நெடுந்தீவு கடலில் மூழ்கிய மீனவப் படகிலிருந்த மீனவர்களுடைய சடலமே என கடற்படையினரால் நம்பப்படுகிறது.

“இது கடந்த 18 ம் திகதி பின்னிரவில் நெடுந்தீவிலிருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் இவ்விபத்து இடம்பெற்றது.

இந்தியாவிலிருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சுமார் ஐம்பதிற்கும் அதிகமான படகுகள் வருகை தந்தன.

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் வருகை தந்த படகுகளையும், மீனவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, இலங்கை கடற்படையிடமிருந்து தப்பிக்கும் நோக்குடன், இந்திய மீனவர்கள் தமது படகுகளை செலுத்த முயற்சித்தனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் வருகை தரும் இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையிடமிருந்து தப்பிச் செல்வதற்காக, இலங்கை கடற்படையின் படகுகளை மோதி சேதப்படுத்துவது வழக்கமானது.

இவ்வாறே, கடந்த 18 ம் திகதி கடற்படையின் படகுகளை சேதப்படுத்தி தப்பிச் செல்ல முயற்சித்த வேளையில், குறித்த இந்திய மீனவ படகு ஒன்று கடலில் கவிழ்ந்தது.

பின் கடற்படையின் சூழியோடிகள் குழு, கடற்படை படகுகள் மற்றும் கப்பல்கள் இணைந்து படகில் பயணித்த மீனவர்களை தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

இச்சம்பவத்தில் கடற்படையின் படகிற்கும் சேதம் ஏற்பட்டது. குறித்த படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய மீனவர்கள் இருவரது சடலங்களே காங்கேசன்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.